Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆனந்த நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா

தர்மபுரி, ஜூலை 3: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி 2 டன் பழங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா கடந்த 30ம்தேதி தொடங்கியது. விழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜையும், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்றது. திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நால்வர் திருவீதி உலாவும், அபிஷேகப் பொருட்கள் வரிசை அழைப்பும் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய நாளான நேற்று காலை, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது. பின்னர், கோயில் பந்தலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு 2 டன் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருஆபரண அலங்கார காட்சியுடன் அம்மையப்பன் திருநடன வீதி உலா மற்றும் கோபுர தரிசனம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆணித்திருமஞ்சன விழா குழு அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.