Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பத்தூர் மண்டலத்தில் சாலையில் திரியும் மாடு, தெரு நாய்களால் விபத்து

அம்பத்தூர்: சென்னை மற்றும் புநநகர் பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகளில் மாடுகள் படுப்பது, உலவுவது போன்றவற்றால் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் நடந்து செல்வோரை முட்டி தாக்கும் அசம்பாவித சம்பவங்களும் நடக்கின்றன. சென்னையில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அவை பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதை காண முடிகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் பயத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை மாடுகள் முட்டும் நிகழ்வு அதிகரித்தது. மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சாலைகளில் மாடுகளை திரிய விடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி, சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் முதல் முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.5ஆயிரமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. இது குறித்து, மாநகராட்சி கூட்டத்தி லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சியின் அறிவு றுத்தல்களை பின்பற்றாமல் மாட்டின் உரிமையாளர்கள் சாலைகளில் தொடர்ந்து மாடுகளை திரிய விட்டு வருகின்றனர். இதற்கு மேலும் கடிவாளம் போடும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாடு வளர்க்கும் நபர்களின், மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் பெறுவது அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

சமீபத்தில் கூட திருவொற்றியூர் பகுதியில் இரண்டு பேரை எருமை மாடு முட்டியது. இதில் அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில் கூர்மையான கொம்புகளுடன் மாடுகள் உலா வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளன. தனியார் பள்ளிகள், 3 மருத்துவமனைகள், வங்கி என பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

தற்போது, சாலையில் சுற்றித்திரியும் இந்த மாடுகளால் மக்கள் அஞ்சி நடுங்கி அந்த வழியாக செல்லும் நிலை உள்ளது. இந்த சாலையில் நடமாடும் மாடுகளை, தெரு நாய்கள் விரட்டுவதால், மாடுகள் அலறி ஓடும்போது பொதுமக்களை இடிக்கும் அபாயம் உள்ளது. இந்த தெருநாய்கள் அவ்வப்போது பொதுமக்களையும் விரட்டி கடிக்க வருவதால் பீதியுடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் திரியும் தெருநாய்கள் மற்றும் மாடுகளை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.