மல்லூர், ஜன.25: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை சேலம் கூடுதல் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் கெஜல்நாயக்கன்பட்டி, வாழகுட்டப்பட்டி, பாரப்பட்டி, சந்தியூர், தம்மநாயக்கன்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடம், சாலை வலுப்படுத்தல், கணினி அறை கட்டுதல், அங்கன்வாடி மைய கட்டிடம், வீடுகள் பராமரிப்பு பணி, ரேஷன் கடை கட்டிடம் ஆகிய பணிகளை சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஆதித்ய லலித் நீலம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் தனபால் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


