மதுக்கரை, ஜூலை 10: கோவைபுதூரில் “சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு\” காப்பகம் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக, 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் ‘‘வாழை, ப்ளூ ஸ்டார், எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை திவ்யா துரைசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் செய்தார்.
கலை நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுடன் திவ்யா துரைசாமி சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியது, குழந்தைகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை திவ்யா துரைசாமி பேசுகையில், ‘பெண் குழந்தைகளுடன் நடனமாடியது மகிழ்ச்சியாக இருந்தது. நமக்கு சிறிதாக தோன்றும் விஷயம், மற்றவர்களுக்கு பெரும் உதவியாக கூட இருக்கலாம். எனவே, நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.
தொடர்ந்து, ‘சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு’ காப்பகத்தை சார்ந்த பாலசுப்ரமணியம் பேசும்போது, ‘‘பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்வற்காக இந்த காப்பகம் இயங்கி வருகிறது. பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்த இதுபோன்ற நிகழ்சிகளை நடத்தி வருகிறோம். மனிதம் வாழும் உலகில், அனைவரும் அனைவருக்குமான உறவுகள், அனைவரையும் அரவணைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை முன்னேற்ற வேண்டும்’’ என்றார்.


