திருவாடானை, ஜூலை 28: திருவாடானையில் சினேகவல்லியம்மன் ஆலய ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருவாடானையில் சினேகவல்லியம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆடிப்பூரத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரத்துடன் கூடிய காமதேனு, அன்னம், குதிரை, ரிஷப மற்றும் கேடகம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் நேற்று ஒன்பதாம் நாள் திருவிழாவாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தேரோடும் நான்கு முக்கிய வீதிகளைச் சுற்றி வலம் வந்தபின் தேர் அதன் நிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து உற்சவராக வலம் வந்த சினேகவல்லியம்மன் தேரிலிருந்து இறக்கப்பட்டு தேர் சுற்றி வந்த பாதையை தடம் பார்க்கும் விதமாக அவ்வழியாக சிறப்பு அலங்காரத்தில் வந்ததை தொடர்ந்து அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தார்.
இந்த தேரோட்டத்தில் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் பாண்டியன் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்வில் திருவாடானை துணைக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருகிற 30ம் தேதி 12ம் நாள் திருவிழாவாக நகரத்தார்களால் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.