திருச்சி, ஜூலை 23: திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயிலில் ஆடி தெற்போற்ச திருவிழாவின் 4ம் திருநாளான நேற்று அம்பாள் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயிலில் ஆடி தெப்போற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4ம் திருநாளான நேற்று அம்மன் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி 4ம் பிரகாரம் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஜம்புகேஷ்வரர் மற்றும் நந்திபெருமானுக்கு பால், தேன், திருநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி தெப்போற்சவத்தின் 5ம் திருநாளான இன்று (23ம் தேதி) அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6ம் திருநாளான நாளை (24ம் தேதி) பஞ்ச மூர்த்திகள் ரிஷாபரூட காட்சிகள், கோடி நெய்வேத்யம், 7ம் திருநாளான 25ம் தேதி பல்லக்கு, 8ம் திருநாளான 26ம் தேதி சிம்ம வாகனம், கோடி நெய்வேத்யம், 9ம் திருநாளான 27ம் ேததி காலை கோரதம், மாலை வெள்ளிமஞ்சம், 10ம் திருநாளான 28ம் தேதி மாலை 4 மணிக்கு பல்லக்கு புறப்பாடு அஸ்திர தேவருக்கு தீர்த்தம் வழங்கிய பின் மாலை அம்மன் சன்னிதியில் மடிசார் சேவை நடைபெறுகிறது, 11ம் திருநாளான 29ம் தேதி வெள்ளிமஞ்சம், 12ம் திருநாளான 30ம் தேதி மாலை மகர லக்னத்தில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரிய தீர்த்த தெப்பக்குளத்தில் தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.