Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செம்பனார்கோயிலில் காற்றுடன் கனமழை பெய்ததால் புளியமரம் சாய்ந்தது

செம்பனார்கோயில், மே 17: மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோயில் வழியாக தரங்கம்பாடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில், திருவிடைக்கழி பாலசுப்பிரமணியர் கோயில், சுதந்திர போராட்ட தியாகியான தில்லையாடி வள்ளியம்மை பெற்றோர் பிறந்த இடமான தில்லையாடியில் வள்ளியம்மையின் நினைவு மண்டபம், வரலாற்று புகழ் பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, தரங்கம்பாடி கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். மேலும் பல்வேறு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை, செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பிரதான சாலையாக உள்ளது.

இந்நிலையில் வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் செம்பனார்கோயிலில் மயிலாடுதுறை- தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து அங்கு சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து மேற்கண்ட சாலையில் போக்குவரத்து சீரானது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் நேற்று விடிய காலை சுமார் இரண்டு மணி அளவில் தொடங்கிய மழை மதியம் வரை நீடித்து பெய்தது இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது குளம் வாய்க்கால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது வெயிலில் தாக்கத்தால் தவித்த பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திடீர் கோடை மழையால் வயல்களில் உழவு பணிகளை தொடங்கி வைக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.