திருப்பூர், ஜூலை 23: கொரோனா கால தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு உத்திரவாதம் அளித்தபடி ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், கொரோனா கால தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், அரசு உத்திரவாதம் அளித்தபடி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட நிரந்தர பணியிடத்தில் பணி வழங்க வேண்டும். வட்டார, மாவட்ட ஒருங்கிணைபாளர்கள், கணினி இயக்குபவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.