நீடாமங்கலம், ஜூலை 10: நீடாமங்கலம் வட்டம் ஒரத்தூர் பகுதிநேர அங்காடியை முழுநேர அங்காடியாக இயங்கிட செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலம் தாலுகா சித்தமல்லிமேல்பாதி ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுவிநியோகத்திட்ட பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடி சித்தமல்லி மற்றும் ஒரத்தூர் கிராமத்தில் பகுதி நேரமாகவும் இயங்கி வருகிறது.
இதில் சித்தமல்லியில் இயங்கும் அங்காடியில் சித்தமல்லி, மணப்பாலக்குடி, படுகை,லாயம், வெள்ளங்குழி உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த 440 குடும்ப அட்டைதாரர்களும்,ஒரத்தூர் அங்காடியில் ஒரத்தூர், திருவள்ளுவர் நகர்,காமாட்சி நகர்,கீழத்தெரு, அம்பலக்காரத்தெரு பகுதியைச்சேர்ந்த 478 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுகின்றனர்.
பகுதிநேர அங்காடி ஒரத்தூர் கிராமத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது.இந்த இரண்டு நாள் என்பது பொருட்களை வாங்க போதுமான நாளாக இல்லை. எனவே ஒரத்தூர் அங்காடியை முழு நேர அங்காடியாக செயல்பட மாவட்ட நிர்வாகம் உத்திரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.