நாமக்கல், ஜூலை 14: நாமக்கல் உழவர் சந்தையில் 56டன் காய்கறிகள், பழங்கள் ரூ.25.16 லட்சம் மதிப்பில் விற்பனையானது.நாமக்கல் கோட்டை மெயின்ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தரமான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர். தற்போது ஆனி மாதம் வளர்பிறை முகூர்த்த சீசன் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 188 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். மொத்தம் 44,650 கிலோ காய்கறிகள் மற்றும் 11,795 கிலோ பழங்கள், 30கிலோ பூக்கள் என மொத்தம் 56ஆயிரத்து 475 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இவை ரூ.25.16 லட்சத்திற்கு விற்பனையானது. 11ஆயிரத்து 295 பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்களை வாங்கி சென்றனர்.