Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் ‘ப’ வடிவிலான மாணவர்கள் இருக்கை

திருவாரூர், ஜுலை 15: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் அரசின் உத்தரவுபடி ‘ப’ வடிவில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்பட்டது. தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்புகள் வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ஸ்கூல் பேக், காலனிகள் மற்றும் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையும் அளிக்கப்பட்டு வருவதுடன் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக்குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிவதற்கான சிறப்பு செயலி மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடியபயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்க்கு வினாடி-வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணிதஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத்திட்டம், வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் திட்டம், கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு, மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி திட்டம் என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவியருக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு தவறாமல் வரவழைக்கும் வகையில் காலை சிற்றுண்டி திட்டமும் துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் ஏழை, எளிய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் காலை நேரத்தில் சத்தான உணவு உண்டு வருவதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் பட்டபடிப்பு படித்து வருபவர்களுக்கு புதுமை பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் பல்வேறு அடிப்படை வசதிகள், விளையாட்டு மைதானம், போதுமான அளவில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவை இருந்து வரும் நிலையில் மாணவர்கள் சேர்க்கையிலும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளின் செயல்பாடு இருந்து வருகிறது.

இந்நிலையில் வகுப்பறையில் கடைசி இருக்கையில் அமரும் மாணவர்களிடம் இருந்து வரும் தாழ்வு மனபான்மையை போக்கி அனைத்து மாணவர்களும் சமம் என்ற நிலையில் ப வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என அரசு சார்பில் புதிய உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று முதல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இந்த ப வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.