பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க, பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யவும் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டங்கள், திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த 3 நாட்கள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இக்கருத்தரங்கை, கலெக்டர் தினேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட எஸ்பி தங்கதுரை முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:
பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களின் பாதுகாப்பு, பெண் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் 2022ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடவும், பெண்களின் பாதுகாப்பிற்கென செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தொடர்புடைய வல்லுநர்கள் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சார்ந்த 50 அரசு அலுவலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல்துறையிலிருந்து 40 காவலர்கள் ஆகியோர்களுக்கான கருத்தரங்கம் இன்று (நேற்று) முதல் நாளை (16ம்தேதி) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யவும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ செயல்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை, சட்ட உதவி, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, அவசர தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டம் தொழில் நகரமாக வளர்ந்து வருகிறது. படித்த பெண்களுக்கு தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்து தங்கி பணிபுரியும் பெண்களுக்கு தோழி விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் புரிய பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று பெண்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில், ஏடிஎஸ்பி (சைபர் க்ரைம்) நமச்சிவாயம், மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, மாவட்ட சமூகநல அலுவலர் சக்தி சுபாசினி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள், போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.