Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சங்கராபுரம் அருகே நிறுத்தி வைத்திருந்த திருட்டு பைக்கில் 20 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

சங்கராபுரம், மே, 31: சங்கராபுரம் அருகே மலைபகுதியில் நிறுத்தி வைத்திருந்த திருட்டு மோட்டார் சைக்கிளை மீட்க சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 நாட்டு வெடிகுண்டுகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அங்கு போலீசை கண்டதும் தப்பிஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூரில் வாலிபர் ஒருவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.

பின்னர் விடியற்காலை அவர் எழுந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனே தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் காணாமல் போன மோட்டார் சைக்கிளில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள தகவலை தெரிவிக்கவே, உடனே அந்த வாலிபரின் உதவியுடன் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் எங்குள்ளது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.

அப்போது காணாமல்போன மோட்டார் சைக்கிள் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகிலுள்ள மணலூர் காப்புக்காடு மலை அடிவாரத்தில் இருப்பதாக தெரியவரவே, அங்கு சென்ற போலீசார் வனப்பகுதியில் தீவிரமாக தேடினர். அப்போது அங்குள்ள ஒரு பாறையின் அடிவாரப் பகுதியில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் மற்றும் மேலும் 2 மோட்டார் சைக்கிள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

பின்னர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது மலைப்பகுதியில் ஒரு பையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார், மோட்டார் சைக்கிள் திருடியவர்கள் வனப்பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தேடுவதை அறிந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்கள்தான் மோட்டார் சைக்கிள் திருடினார்களா அல்லது வேட்டையாட வந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அதிகளவில் அங்கு வனம் மலை குன்றுகள் இருப்பதால் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துகிறார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் மோட்டார் சைக்கிள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.