Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரூராட்சிகள் துறை சார்பில் ரூ.184.41 கோடியில் 2,387 பணிகள்

தர்மபுரி, ஜூலை 23: தர்மபுரி மாவட்டத்தில், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.184.41 கோடி மதிப்பிலான 2,387 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 704 பேர் பயனடைந்துள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் அரசு வழங்கியுள்ளது. இதனால் பேரூராட்சிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் உடனுக்குடன் மேம்படுத்தப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், மூன்றாம் நிலை பேரூராட்சி, 2ம் நிலை பேரூராட்சி, முதல்நிலை பேரூராட்சி, தேர்வுநிலை பேரூராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி என வரியினங்களின் வருவாய் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன. பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுகா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள், வழிபாட்டு தலங்களாகவும், தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில், ரூ.184.41 கோடி மதிப்பீட்டிலான 2,387 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சதீஸ் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.2.03 கோடி மதிப்பில் பொ.மல்லாபுரம் மற்றும் கம்பைநல்லூர் பேரூராட்சியில் ஓடை, கண்மாய் ஊரணிகள் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், ரூ.13.41 கோடி மதிப்பில் அரூர், கடத்தூர், காரிமங்கலம், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி மற்றும் பென்னாகரம் ஆகிய பேரூராட்சிகளில் 17.791 கி.மீ. நீளமுள்ள சாலை என 22 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.29.26 கோடி மதிப்பில் அரூர், கடத்தூர், காரிமங்கலம், கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் மற்றும் பொ.மல்லாபுரம் ஆகிய பேரூராட்சிகளில் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ், ரூ.93 லட்சம் மதிப்பில் காரிமங்கலம் பேரூராட்சிகளில் 1.209 கி.மீ. சாலை மற்றும் ரூ.6.10 கோடி மதிப்பில் காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம் ஆகிய பேரூராட்சிகளில் மின்மயானம், பஸ் நிலைய மேம்பாடு, சிறுபாலம், சமுதாயக்கூடம், அலுவலக கட்டிடம் ஆகிய 10 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.9.20 கோடி மதிப்பில் 21.763 கி.மீ. நீளமுள்ள சாலை பணிகளும், இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.4.54 கோடி மதிப்பில் பஸ் நிலையம் என 8 பணிகளும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.9.40 கோடி மதிப்பில் 12.856 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ், ரூ.1.12 கோடி மதிப்பில் 1204 தனிநபர் கழிப்பிட பணிகள், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.15.27 கோடி மதிப்பில் 19.409 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.1.60 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலகு கட்டிட பணிகள், ரூ.16.89 கோடி மதிப்பில் 244 குடிநீர் திட்ட பணிகள், பொது சுகாதார பணிகள் மூலம் ரூ.13.53 கோடி மதிப்பில் 159 சாலை பணிகள், வடிகால் பணி, மயான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, 6வது மாநில நிதி திட்டத்தின்கீழ், ரூ.17.19 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் பள்ளி பராமரிப்பு போன்ற 31 பணிகளும், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், ரூ.30.38 கோடி மதிப்பில் நீர்நிலை மேம்பாடு, பூங்கா மேம்பாடு மற்றும் குடிநீர் மேம்பாடு போன்ற 17 பணிகளும், அயோத்திதாசர் திட்டத்தின்கீழ், ரூ.75 லட்சம் மதிப்பில் சாலை பணிகள், குடிநீர் மேம்பாடு பணி போன்ற பணிகளும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.12.81 கோடி மதிப்பில் 610 பணிகள் என மொத்தம் ரூ.184.41 கோடி மதிப்பிலான 2,387 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 3,26,704 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.