Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை, ஜூன் 2: சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினமும் 16 லட்சம் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருவதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகளில் தினசரி ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பேருந்துகளில், பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே சில்லரை பிரச்சனை அதிகமாக வரும். இப்பிரச்னைக்கு தீர்வாக, மின்னணு டிக்கெட் இயந்திரம் வழங்கப்படும் என்றும், மக்கள் அனைவரும் ஜிபே போன்ற யுபிஐ மூலம் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என்றும் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சோதனை முயற்சியாக கடந்த சில மாதங்களாக ஒரு சில பகுதிகளில் மட்டுமே இது செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை அனைத்து பணிமனைகளிலும் இந்த மின்னணு டிக்கெட் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த பிப்.28 முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் (இடிஎம் மிஷின்கள்) பயன்பாட்டில் உள்ளது. தற்போது, அனைத்து பணிமனைகளிலும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக தினமும் 16 லட்சம் பயணிகளுக்கு மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் வாயிலாக பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கான, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ), அட்டைகள், பணபரிவர்த்தனைக்கான வசதிகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்குவது பயணிகளுக்கும், நடத்துநர்களுக்கும் கால விரயத்தை குறைத்து, பயணிகளுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.