கிருஷ்ணகிரி, மார்ச் 18: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பண்டசீமனூர் மந்தாளுகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமிநாயுடு(80). இவரது மனைவி சரோஜா(70). இவர்கள் 14 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில், 4 குட்டிகள் இருந்தது. நேற்று முன்தினம், வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அருகேயுள்ள பட்டியில் அடைத்தனர். நேற்று காலை பார்த்தபோது, பட்டியில் இருந்த 4 குட்டிகள் உள்பட 12 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
மேலும், இரண்டு ஆடுகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த விஏஓ ரமேஷ், உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததா? அல்லது மர்ம விலங்கு எதுவும் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததா என தெரியவில்லை,’ என்றனர். அந்த பகுதியில் மர்ம விலங்குகள் எதுவும் சுற்றி வருகிறதா என வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


