வேலூர், ஜூலை 26: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசு பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.வேலூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் தலைமையில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை தமிழக- ஆந்திர எல்லை பகுதியான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் சோதனையிட்டனர்.
அப்போது பஸ்சில் சந்தேகப்படும்படி தோளில் தோல் பையுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து அவர்களது பையில் சோதனையிட முயன்றபோது, ஒருவர் பஸ்சில் இருந்து இறங்கி பையுடன் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட 2 பேரின் பையில் சோதனையிட்டபோது, தலா 5 கிலோ என இரண்டு பைகளிலும் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் 2 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மீனாட்சி நகரை சேர்ந்த விஜய்ஆனந்த்(50), விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பாக்கம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பது தெரியவந்தது. தற்போது இவர்களில் விஜய்ஆனந்த் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்திலும், சதீஷ்குமார் திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடியிலும் வசித்து வருவதும் தெரிய வந்தது.
தப்பியோடியவர் திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அலெக்சாண்டர் தலைமையில் மேற்கண்ட 2 பேரும் சேர்ந்து குழுவாக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி கடத்தி வந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து விஜய் ஆனந்த், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய அலெக்சாண்டரை தேடி வருகின்றனர்.