தேனி, டிச. 6: தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2 ஆயிரத்து 88 லிட்டர் மதுபானங்களை நேற்று போலீசார் அழித்தனர். தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவினரால் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை சட்டவிரோத மதுவிற்பனை சம்பந்தமாக 1231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 601 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மொத்த கொள்ளளவானது 2 ஆயிரத்து 88 லிட்டர் ஆகும்.
கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களில் இருந்து மதுபானங்களை நேற்று தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி சினேகாபிரியா அறிவுறுத்தலின்பேரில், கலெக்டரின் செயல்முறை ஆணையின்படி, தேனி மாவட்ட கலால் துறை உதவி ஆணையர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி ஆகியோர் முன்னிலையில் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பை பேக் ஸ்கீம் திட்ட விதிமுறைகளின்படி, முறையாக கொட்டி அழிக்கப்பட்டது.

