Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐ.டி ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய்!

நன்றி குங்குமம் டாக்டர்

சர்க்கரை நோய் மருத்துவர் அஸ்வின் கருப்பன்

உஷாரா இருங்க!

சென்னை க்ளெனீகில்ஸ் மருத்துவமனை சார்பில் சமீபத்தில் 150 தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் டைப் 2 சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு சர்வதேச மருத்துவம் மற்றும் பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்டது. அதில் திறமைமிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களிடம் ஆரோக்கியம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் நீரிழிவு நோயைப் பற்றி அறிந்திருந்தாலும், பலர் அதை தடுப்பதற்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிக்கத் தவறிவிடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த மருத்துவர் அஸ்வின் கருப்பன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

டைப் 2 சர்க்கரை நோய், ஒருவரின் உடல்நலப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான தடைகள் பற்றி ஐடி ஊழியர்கள் எவ்வளவு அறிந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள கேள்வித்தாள் அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நல்ல விழிப்புணர்வு உண்மையில் நல்ல தடுப்புக்கு வழிவகுக்கிறதா என்பதைக் கண்டறியும் நோக்கில் இது நடத்தப்பட்டது.

முக்கிய விவரங்கள்

65% ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் பற்றி நன்கு தெரிந்திருந்தது.

45% பேர் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

68% பேர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும், 76% பேர் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாகவும் கூறியதோடு, ஆனால் இவற்றை தொடர்ந்து கடைபிடிப்பதில் சிரமம் இருப்பதாகவும் கூறியிருந்தனர்.

அதில் முக்கிய தடைகளாக நேரமின்மையை 33% சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். மேலும், 23 சதவீதம் பேர் வேலைக்குப் பிறகு சோர்வு மற்றும் வேலை தொடர்பான மன அழுத்தம் ஆகியவற்றை கூறியிருந்தனர்.

மூத்த ஊழியர்களிடையே விழிப்புணர்வு மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் அதிகமாக காணப்பட்டன.

இதன் அர்த்தம் என்ன?

ஐடி வல்லுநர்கள் நீரிழிவு அபாயத்தைப் புரிந்துகொண்டாலும், நீண்ட வேலை நேரம், மன அழுத்தம் மற்றும் கம்ப்யூட்டரில் அதிக வேலைகள் ஆகியவை ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதை தடுப்பதாக இந்த ஆய்வு காட்டுகிறது. உட்கார்ந்த வேலைகள் மற்றும் ஒழுங்கற்ற தூக்க முறைகள் ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்கு இளம் வயதிலேயே நீரிழிவு ஏற்படக் காரணமாகிறது.

இந்த ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களான மருத்துவர்கள் சர்க்கரை நோய் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்த செய்திகள்.நீரிழிவைத் தடுக்க விழிப்புணர்வு மட்டும் போதாது, அதை செயல்படுத்த நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும். - மருத்துவர் அஸ்வின் கருப்பன் உங்கள் உடல்நலத்திற்காக செலவிடும் நேரம் ஒருபோதும் வீணாகாது - ஐந்து நிமிடங்கள் கூட உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும் - மருத்துவர் ஆப்ரின் ஷபீர் வேலை நேரம் பெரும்பாலும் நமது உடல்நல நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

வேலை நேரத்தில் நிற்க, தண்ணீர் குடிக்க அல்லது சிறிய உடற்பயிற்சி செய்வதற்கான நினைவூட்டல்கள் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். தடுப்பு என்பது நீங்கள் உங்களுக்குக் கொடுக்கும் நிமிடங்களிலிருந்து தொடங்குகிறது.மருத்துவ பரிசோதனைகள், ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் வேலை நேரத்தில் உடற்பயிற்சி இடைவேளைகள் உள்ளிட்ட பணியிட அடிப்படையிலான நல்வாழ்வு திட்டங்களையும் இந்த ஆய்வுக் குழு பரிந்துரைக்கிறது.

விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலமும், ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதன் மூலமும், இளம் தொழில்நுட்ப நிபுணர்களிடையே சர்க்கரை நோயைத் தடுப்பதில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

வேலைக்குப் பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான குறிப்புகள்

அலுவலகப் பணியாளர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கான தற்காப்பு வழிகள்.

கம்ப்யூட்டரை ஆப் செய்த உடனேயே 10 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உங்கள் இரவு உணவை ஜீரணிக்கவும், சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

வேலைக்குப் பிறகு ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதைத் தவிர்க்கவும் - எளிய உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

நிம்மதியான தூக்கத்திற்கு மாலை 6 மணிக்கு பிறகு காபி போன்ற பானங்களை குடிப்பதை தவிர்க்கவும்.

சோபாவில் உட்காருவதற்கு முன் உங்கள் உடலை நீட்டவும் - லேசான நீட்சிகள் கூட ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

அதிக நேரம் டிவி பார்ப்பதற்கு பதிலாக உங்கள் குடும்பத்தினருடன் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

இரவு உணவிற்குப் பிறகு வேலை செய்யாதீர்கள் அலுவலக பணியை வீட்டில் வந்து செய்யாதீர்கள். தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது, செல்லப்பிராணிகளை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது அல்லது 15 நிமிட யோகா ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுங்கள். தூக்கத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது சிறந்தது.

நன்கு தண்ணீர் குடியுங்கள். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களுக்கு மாற்றாக எலுமிச்சை கலந்த தண்ணீரை குடியுங்கள்.

தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்குங்கள்.

வேலைக்குப் பிந்தைய ஓய்வு என்பது உங்களுக்கான மறுநாளைய ஆற்றலைத் தீர்மானிக்கிறது. எனவே அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அதிகப்படியான வேலைகளை செய்யாமல், உடலுக்கு ஓய்வு தருவது நல்ல பலனை தரும் என ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

- ஸ்ரீதேவி குமரேசன்