பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் புகார்தாரரிடம் நேற்று எஸ்.ஐ.டி தலைவர் டிஜிபி பிரோணாவ் மொஹந்தி மணிக்கணக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டார். தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கொடுத்த புகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு, டிஜிபி பிரணோவ் மொஹந்தி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் எம்.என்.அனுசேத், சவுமியலதா, ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
எஸ்.ஐ.டி விசாரணையைத் தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது. மங்களூரு மல்லிகட்டேவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் எஸ்.ஐ.டி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தர்மஸ்தலா காவல் நிலைய ஆய்வாளரிடம் ஆதாரங்களைப் பெற்று அவரிடம் தகவல்கள் பெறப்பட்டன. டிஐஜி அனுசேத் இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ஜிதேந்திர தயாமா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஐஜி அனுசேத், எஸ்.ஐ.டி-யில் நியமிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். மேலும், ஒரு சில இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த சனிக்கிழமை தனது வழக்கறிஞர்கள் 2 பேருடன் விசாரணைக்கு ஆஜரான புகார்தாரரிடம் எஸ்.ஐ.டி அதிகாரி அனுசேத் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தார்.
இந்நிலையில், நேற்று 2வது நாளாக எஸ்.ஐ.டி முன் ஆஜரான புகார்தாரரிடம் எஸ்.ஐ.டி தலைவர் பிரணோவ் மொஹந்தி மணிக்கணக்கில் ஏராளமான கேள்விகளைக் கேட்டார். புகார் கொடுத்த தூய்மைப் பணியாளர், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறியதுடன், மண்டை ஓட்டுடன் புகார் அளித்ததால், மண்டை ஓடு, பாதிக்கப்பட்ட உறவுக்காரப் பெண் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
புகார்தாரரிடம் எஸ்.ஐ.டி அதிகாரி பிரோணாவ் மொஹந்தி கேட்ட கேள்விகள்:
* நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்தபோது உங்களுடன் இருந்தவர்கள் யார்?
* உடல்களை அடக்கம் செய்ய உங்களை கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளரின் பெயர் என்ன?
* நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது?
* நீங்கள் புதைத்த உடல்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களின் உடல்கள் ஏதேனும் இருந்ததா?
* பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உங்களுக்கு என்ன உறவு?
இதுபோன்ற ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. புகார்தாரரையும் எஸ்.ஐ.டி காவலில் எடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.