திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ள டிஜிபி அலுவலகத்தில், டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா முன்பு, 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் நேற்று சரணடைந்தனர். இதுகுறித்து நிருபர்களிடம் டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா கூறியதாவது: போலீசாரிடம் சரணடைந்தவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவர்கள் ராமகிருஷ்ணா மற்றும் அருணா ஆகியோர் அடங்குவர். இருவரும் பகுதி குழு மட்டத்தில் பணியாற்றி வந்தனர்.
கடந்த காலங்களில் பல தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் சரணடைவதால் ஆந்திரா-ஒடிசா- சட்டீஸ்கர் எல்லையில் மாவோயிஸ்டு படைகள் இன்னும் பலவீனமடைந்துள்ளது. மாவோயிஸ்டுகளால் கைவிடப்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் ஏகே-47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். மாவோயிஸ்டுகளின் நடமாட்டங்களை உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற பிற மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் 21 பேர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சரணடைந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்தது என்றார்.