Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குரு வழிபாட்டுக்காக திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று வியாழக்கிழமை குரு வழிபாட்டுக்காக கொளுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனாலே இங்கு வரும் பக்தர்கள் கடல், நாழிக்கிணறில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறையான மே மாதமும் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்னும் சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பெரும்பாலானவர்கள் தங்கள் விடுமுறை பயணத்தை கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே கழித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை குரு பகவான் வழிபாட்டுக்கு உகந்த நாள் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.

நேற்று கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, குரு பகவானாகிய தட்சிணாமூர்த்தி மற்றும் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தேய்பிறை அஷ்டமி நாளிலும் கோயிலில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதுடன் நகரில் அதிகப்படியான பக்தர்களின் வாகனங்கள்

தென்பட்டது.

மீண்டும் வெயில்

திருச்செந்தூர் பகுதியில் கடந்த வாரங்களில் வெயிலின் தாக்கம் இல்லாமல் இதமான சூழல் நிலவியது. இதனால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சியான சூழலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று கடுமையான கோடை வெயிலினால் கோயிலுக்கு வந்த பக்தர்களில் குழந்தைகள் முதல் பெரியவர் கடலில் காலை முதல் மாலை வரை உற்சாகமாக நீராடி வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொண்டனர்.