பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் 450 வாரிசுதாரர்களுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும்: நகராட்சி ஆணையரிடம், தொ.மு.ச நிர்வாகிகள் மனு
மதுராந்தகம்: நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்களில், பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றதுப்போல் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவது வழக்கம். ஆனால், 2023ல் நகராட்சி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட புதிய விதியில் 10க்கும் மேற்பட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கல்வித் தகுதியற்ற வாரிசுகளுக்கு எவ்வித பதவியும் வழங்காமல், சுமார் ஓராண்டுக்கு மேலாக நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே, புதிய நகராட்சி விதியில் திருத்தம் செய்து 450க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் பணி உத்தரவு வழங்கிட தமிழ்நாடு நகராட்சிகள் தொ.மு.ச.வின் வாயிலாக அகில இந்திய தொ.மு.ச. பேரவை தலைவர் நடராஜன், நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு நகராட்சிகள் தொ.மு.ச மாநில தலைவர் வி.யு.கார்த்திகேயன், பொதுச்செயலாளர் சு.அரிதாசன், இணை பொதுச்செயலாளர் கோ.அதேவேலு, இணை செயலாளர் க.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.