Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிலம்பமும் நாட்டியமும் எனது உயிர்!

நன்றி குங்குமம் தோழி

``கலைகள் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்”என்கிற கூற்றுபடி வாழ்பவர்கள் சிலர். அப்படியான பன்முகத் திறமை கொண்ட எட்டாம் வகுப்பு சிறுமிதான் திருநின்றவூரைச் சேர்ந்த சரண்யா தணிகைவேல். பரதநாட்டியம், சிலம்பம், கல்வி, சமூக சேவை என

பல்துறை வித்தகியாக இருக்கிறார் பதிமூன்று வயதேயான இந்தச் சிறுமி.

இன்றைய இளம் தலைமுறையினரின் கவனம் முழுதும் செல்போன் என்ற பெரும் மாயவலையில் உள்ளனர். அதில் முழுமையாக சிக்கிக் கொள்ளாமல் இருக்க கண்டிப்பாக ஏதாவது ஒரு கலை, விளையாட்டு, நடனம், பாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தினால் குழந்தைகளின் வாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும். இவை உடலுக்கு மட்டுமில்லை மன ஆரோக்கியத்திற்கு நூறு சதவீதம் நல்லது என தன்னம்பிக்கையுடன் பேசத் துவங்கினார் சரண்யா தணிகைவேல்.

‘‘சிறு வயதிலிருந்தே பரதமும் சிலம்பமும் கற்றுக்கொண்டு வருகிறேன். நாங்க சாதாரண நடுத்தர குடும்பம் தான். ஆனால், கலை மேல் எனக்கு இருந்த ஆர்வத்தை என் பெற்றோர்கள் புரிந்து கொண்டு அதற்கான பயிற்சியினை எனக்கு ஏற்படுத்திக் ெகாடுத்தார்கள். நிறைய மேடைகளில் நடனமாடி இருக்கேன். சிலம்பத்தில் பரிசுகளும் பெற்றிருக்கிறேன். மூன்று வயதில் இருந்து பரதம் கற்றுக் கொண்டு வருகிறேன். எனது பெற்றோருக்கு பரதநாட்டியத்தில் அதிக விருப்பம் என்பதால் மூன்றரை வயதிலிருந்தே அருகிலிருந்த நாட்டிய பள்ளியில் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். எனது முதல் குரு திருவள்ளூர் தேவயானி அவர்கள்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த எனக்கு கலை குறித்த பின்னணிகள் ஏதும் கிடையாது. முதன் முதலில் நாட்டியம் கற்க துவங்கினேன். பத்து வருடங்களாக நாட்டியம் கற்றுக்கொண்டு பல்வேறு மேடைகளில் ஆடியும் வருகிறேன். பள்ளி விழாக்கள், ஆண்டு விழாக்கள், கோவில் திருவிழாக்களில், ஏனைய கலை சார்ந்த மேடைகளில் நடனமாடி இருக்கிறேன். பரதம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நடனத்திற்காக பல விருதுகள் மற்றும் பரிசுகளை பெற்றிருக்கிறேன். பால நாட்டிய சிரோன்மணி, நாட்டிய சுடர் மணி, நாட்டிய கலைமாமணி, நாட்டிய நந்தகி, நித்ய பூர்வ நிரஞ்சனா போன்ற பட்டங்களும் வாங்கி இருக்கிறேன். சமீபத்தில் கொற்றவை விருது பெற்றேன். அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது’’ என்றவர் சிலம்பம் பயிற்சி குறித்து பகிர்ந்தார்.

‘‘பரதம் மூன்று வயது என்றால், சிலம்பம் நான்கு வயது முதல் கற்க ஆரம்பித்தேன். திருவொற்றியூர் கதிர் அவர்களிடம்தான் பயிற்சி பெற்று வருகிறேன். மாநிலம், மாவட்டம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றிருக்கிறேன். சிலம்பத்தில் இரண்டு உலக சாதனைகளும் படைத்துள்ளேன். நான்கு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தது என்னால் மறக்க முடியாத தருணம்.

எனக்கு இப்ப 13 வயதுதான் ஆகிறது. எதிர்காலத்தில் சிலம்பத்தில் மேலும் பயிற்சி எடுத்து போட்டிகளில் பங்கு பெற்று பல சாதனைகளை படைக்க வேண்டும். அதே போல் நடனத் திறன்களை மெருகேற்றி மேலும் பல மேடைகளில் நடனமாட வேண்டும். என்னுடைய எதிர்கால கனவிற்கு என் பெற்றோர் பக்க பலமா இருக்கிறார்கள். அதற்காக நான் பயணிக்க வேண்டிய தூரங்களும் நிறைய இருக்கிறது. சிலம்பம், நடனம் மட்டுமில்லாமல் கல்வியையும் திறம்பட கற்று வருகிறேன்.

என் பெற்றோர் இருவருமே ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் சமூக சேவகர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இந்த சேவைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனை சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்த எனக்கும் சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் சட்டம் பயில இருக்கிறேன். அதன் மூலம் பலருக்கு உதவ வேண்டும். சொந்தமாக நடனம் மற்றும் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆரம்பிக்க வேண்டும். அதில் வசதியில்லாதவர்களுக்கு இலவசமாக சொல்லித்தரவேண்டும். இப்படி நிறைய விருப்பங்கள் உள்ளது. அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’’ என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் சிறுமி சரண்யா தணிகைவேல்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்