Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.15 கோடி சொத்து மோசடி புகார்:வங்கி மேலாளர் முன்ஜாமீன் மனு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் வள்ளி அதிகேஷ். 75 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர். இவருக்கு சொந்தமான நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கோவையை சேர்ந்த எஸ்வி ஷிப்பிங் நிறுவன இயக்குநர்களான சுனிதா, மனோஜ் ஆசிஷ், விஷ்ணு பிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அவர்களிடம் சொத்து ஆவணங்களை வள்ளி அதிகேஷ் கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களை வைத்து சென்னை பாடியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வைத்து பணத்தை வாங்கியுள்ளனர். அதில் வள்ளி அதிகேசுக்கு ரூ.1.72 கோடியை கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்துள்ளனர். சொத்தையும் மீட்டு தரவில்லை.

இதையடுத்து, வள்ளி அதிகேஷ், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், வங்கி மேலாளரின் உதவியுடன் தனது சொத்தை அடமானம் வைத்து பணம் வாங்கி மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வங்கி மேலாளர் சுரேஷ் பாண்டியனை விசாரணைக்காக ஆஜராகுமாறு கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து, தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சுரேஷ் பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், தனக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை. சொத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். ஆவணங்கள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கடன் வழங்கினோம்.இதில் வேண்டுமென்றே தன்னையும் புகாரில் சேர்த்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.