Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் பாலியல் உறவுக்கான சம்மத வயதை 18க்கு கீழ் குறைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: இந்தியாவில் பாலியல் உறவுக்கான சம்மத வயது நிர்ணயம் என்பது ஒரு சட்ட வரையறையை கொண்டுள்ளது. அதாவ்து கடந்த 1860ல் இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இரு பாலருக்கான பாலியல் உறவு என்பது 10 வயதாக இருந்தது. பின்னர் அதுவே 1891ம் ஆண்டு 12ஆகவும், 1925ல் 14கவும், 1940ல் 16ஆகவும் படிப்படியாக உயர்த்தப்பட்டது. இறுதியாக, 1978ம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், இந்த வயது வரம்பு 18ஆக நிர்ணயிக்கப்பட்டு இன்று வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது.

குறிப்பாக 18 வயதுக்குக் குறைவானவர்களுடன் உடலுறவு கொள்வது, அவர்களின் சம்மதத்துடன் நடந்தாலும் அது சட்டப்படி குற்றமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘குழந்தைகளை பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காகவே பாலியல் உறவுக்கான சம்மத வயது வரம்பு 18 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, உறவினர்கள் அல்லது நன்கு அறிமுகமானவர்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க இந்தச் சட்டம் உதவுகிறது. மேலும் போக்சோ போன்ற குழந்தை பாதுகாப்புச் சட்டங்களின் வலிமையைக் குறைக்கும் என்பதால், 18 என்று நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பைக் குறைப்பது சாத்தியமில்லை. அவ்வாறு செய்து விட்டால் இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளின் முன்னேற்றத்தைப் பின்நோக்கி தள்ளுவது போலாகிவிடும். இருப்பினும், இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கின் தன்மைக்கேற்ப தங்களின் தன்னிச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது.

அதாவது காதல் உறவுகளில் ஈடுபடும், ஏறக்குறைய சம வயதுடைய நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் உரிய தன்னிச்சையான முடிவுகளை எடுக்கலாம். அதில் எந்தவித சமரசமும் இல்லை. மேலும் தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகளின் படி குழந்தைகளுக்கு எதிராக 50சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், அவர்களுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே நிகழ்த்தப்படுவதால், 18வயது என்ற சம்மத வயது வரம்பை மாற்றுவது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.