Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம் - மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு வயது 75. சர்க்கரை நோயாளி. இன்சுலின் எடுத்து வருகிறேன். ஆனாலும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை. ‘ஹெச்பிஏ1சி’ (HbA1C) அளவு 10 இல் இருக்கிறது. எனக்கு இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. சிறுநீர் அவசரமாக வருகிறது. கொஞ்சம்கூட அதை அடக்க முடியவில்லை. இதனால் இரவில் அடிக்கடி எழுந்திருக்க வேண்டியுள்ளது; தூக்கம் கெடுகிறது. என் பிரச்னை தீர நான் என்ன செய்ய வேண்டும்?

- நிர்மலா மேரி, புதுச்சேரி

உங்களுக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை. அதை முதலில் சரிசெய்யுங்கள். இன்சுலின் அளவையோ நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை அளவுகளையோ மருத்துவரின் ஆலோசனைப்படி கூட்டிக்கொள்ளுங்கள். உங்கள் சிறுநீரில் தொற்று உள்ளதா என்பதை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.உங்கள் பிரச்சினைக்கு முதுமை ஒரு முக்கியக் காரணம். உங்கள் வயதில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே சிறுநீர் அடிக்கடி கழிவது உண்டு. அடுத்து, புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சி (BPH), ‘மிகைச்செயல் சிறுநீர்ப்பை’ (Overactive Bladder) ஆகிய பிரச்னைகள் இருக்கலாம்.

சிறுநீரை அடக்க உதவும் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பலவீனமாக இருக்கலாம். இதற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் ஏதாவது காரணமா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். சிறுநீர் அவசரமாக வருவதற்கு இந்தக் காரணங்கள் முக்கியமானவை.

உங்கள் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுங்கள். சிறுநீரை அடக்க முடியாமல் போவதற்கும் இரவில் அவசரமாகப் போவதற்கும் நவீன மருத்துவத்தில் பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து, மாத்திரை, ஊசிகளை எடுத்துக்கொள்வதோடு சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் இடுப்புத் தசைகளுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

எனக்கு வயது 28. என்னுடைய இரண்டு பாதங்களிலும் பாத வெடிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் வலியும் ஏற்படுகிறது. இதை எவ்வாறு சரிசெய்வது டாக்டர்?

- கே.மீனாம்பாள், மதுரை.

பாத வெடிப்பு, பித்த வெடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது பாதங்களின் தோலில் ஏற்படும் வறட்சியான நிலையைக் குறிக்கிறது. இது வலி, எரிச்சல், அழற்சி போன்ற தொல்லைகளையும்

ஏற்படுத்தலாம்.கோடைக்காலம், குளிர்காலம், குறைந்த ஈரப்பதம், கடுமையான சோப்பு அல்லது டிடர்ஜென்ட்களைப் பயன்படுத்துவது, நீர்ச்சத்து குறைவாக இருப்பது போன்ற காரணிகளும் தோல் வறட்சிக்கு வழிவகுக்கும். அதிக உடல் எடை காரணமாகப் பாதங்களில் அழுத்தம் அதிகரித்து, தோலில் வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

நீண்ட நேரம் நின்று வேலை செய்பவராக இருந்தாலும் பாத வெடிப்புக்கு ஆளாகக்கூடும். சர்க்கரை நோய், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது, ஒவ்வாமை போன்ற சில மருத்துவ நிலைமைகள் பாத வெடிப்புக்கு வழி வகுக்கும். சரியான செருப்பு அணியாமல் இருப்பதும் பாதவெடிப்புக்கு ஒரு காரணமாகலாம்.

பொதுவாக, பாதவெடிப்புகளில் தினமும் இரண்டு வேளைக்கு ஈரப்பதமேற்பிகளைப் (Moisturizer) பூசினால் பலன் கிடைக்கும். தினமும் 10-15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊற வைப்பது தோலை மென்மையாக்க உதவும். ஆனாலும், உங்களுக்கு எந்தக் காரணத்தால் பாதவெடிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுங்கள். அதுதான் உங்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

என் வயது 65. உயரம் 166 செ.மீ. மருத்துவப் பரிசோதனையில் தைராய்டு TSH கூடுதலாக இருந்ததால் 75 mg மாத்திரை பரிந்துரைக்கப்பட்டது. ஆறு மாதங்களில் TSH சரியான அளவுக்கு வந்துவிட்டதால் 50 mg ஆகக் குறைத்து, தொடர்ந்து எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார் ஒரு மருத்துவர். ஆனால், தைராய்டு மாத்திரை எடுத்துக்கொண்டதில் இருந்து உடல் எடை படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. 54 கிலோவில் இருந்து 46 கிலோவுக்குக் குறைந்துவிட்டது. தற்போது வேறு ஒரு மருத்துவர் உடல் எடையைக் கூட்டுவதே முக்கியம் எனக் கூறி மாத்திரையை 12.5 mg அளவுக்குக் குறைத்துவிட்டார். மூன்று மாதங்களில் TSH அளவு 14இல் இருந்து 115 ஆகக் கூடிவிட்டது. எடையும் 46 கிலோவி லிருந்து 49 கிலோவாகக் கூடிவிட்டது. மருத்துவர் TSH கூடுவது பற்றிக் கவலையுற வேண்டாம், எடை 55 கிலோ வரை வந்த பின் தைராய்டு பற்றிப் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார். தங்கள் ஆலோசனை தேவை.

- மு.இராமலிங்கம், திருச்சி.

உங்களுக்குத் தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. TSH அளவு அதிகரித்தால், உடல் எடை குறித்த பிரச்சினை மட்டுமல்லாமல் மலச்சிக்கல், சரும வறட்சி, களைப்பு போன்ற வேறு பல விளைவுகளையும் சந்திக்க வேண்டியது வரும். நீங்கள் உடனடியாக ஒரு இயக்குநீர் நல மருத்துவரைச் (Endocrinologist) சந்தித்து, சரியான அளவில் தைராய்டு மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

எனக்கு வயது 28. நான் தினமும் நடைப்பயிற்சி செய்கிறேன். நண்பர்கள் என்னை ஜாகிங் செல்லச் சொல்கிறார்கள். நான் ஜாகிங் செல்லலாமா? எது நல்லது, நடைப்பயிற்சியா, ஜாகிங்கா?

- ரா.சி.செல்வக்குமார், கோவை.

நடைப்பயிற்சி, மெல்லோட்டம் (Jogging) இந்த இரண்டும் சிறந்த உடற்பயிற்சி வகைகளே. உங்கள் தேவை என்ன, இலக்கு என்ன என்பதைப் பொறுத்து நீங்களே இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். உங்களுக்கு உதவ சில குறிப்புகளைத் தருகிறேன். இதய நலன், எலும்பு வலிமை, எடை மேலாண்மை என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நடைப்பயிற்சி மேம்படுத்துகிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. மன மகிழ்ச்சிக்காக நண்பர்களோடு சேர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மெல்லோட்டத்தோடு ஒப்பிடும்போது நடைப்பயிற்சியில் குறைந்த அளவில் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதுதான் நடைப்பயிற்சியின் குறைபாடு. மெல்லோட்டத்தில் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடை விரைவில் குறையும். இதய ஆற்றல் விரைவில் மேம்படும்.

ரத்த அழுத்தம் நன்கு கட்டுப்படும். நீரிழிவுக் கட்டுப்பாட்டில் விரைவான முன்னேற்றத்தைக் காணலாம். மெல்லோட்டத்தில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், அதை முறைப்படி செய்யத் தவறினாலோ அதிகமாக மேற்கொண்டாலோ முழங்கால் மூட்டில் குருத்தெலும்புத் தசைகள் சிதைவடையலாம். நீங்கள் உடற்பயிற்சியின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தால் சில மாதங்களுக்கு நடைப்பயிற்சியும் அதைத் தொடர்ந்து மெல்லோட்டமும் மேற்கொள்ளலாம்.

ஏற்கெனவே பல மாதங்களாக நடைப்பயிற்சி செய்வதாக இருந்தால், தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 15 நிமிடங்கள் மெல்லோட்டம், மறுபடியும் 10 நிமிட நடைப்பயிற்சி எனப் பிரித்தும் மேற்கொள்ளலாம். நீங்கள் மெல்லோட்டத்தை மட்டுமே விரும்புகிறீர்கள் என்றால், ஒரு முழுமையான உடல் பரிசோதனைக்குப் பிறகு அதை மேற்கொள்ளுங்கள்.