Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர்.

‘‘எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பப் பை நீக்கப்பட்டது. புற்றுநோய் வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லையென்று டாக்டர் சொன்னாலும், குழப்பமாக உள்ளது. வெள்ளைப்படுவது, வலது மார்பில் பால் போல் திரவம் வருவது என்ற பிரச்னைகளால் பயந்துகிடக்கிறேன். எனக்கு தெளிவு தாருங்கள்?’’

- எஸ்.ஜானகி, ஈரோடு.

‘‘கர்ப்பப் பையை நீக்கியவர்களுக்கெல்லாம் கேன்சர் வரும் என்று பயப்படத் தேவை இல்லை. கர்ப்பப் பை நீக்கும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களைப் பொதுவாக மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒரு தடவை செக்கப்புக்கு வரச் சொல்வார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அந்த மருத்துவரிடம் தெளிவாகக் கூறி விளக்கம் பெறுங்கள். தேவையில்லாமல் பயப்படவும், குழம்பவும் அவசியமில்லை. வெள்ளைப்படுதல், மார்பகத்தில் திரவம் வருதல் போன்றவை இன்ஃபெக்சனால்கூட இருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுக்கலாம். கர்ப்பப்பை நீக்கியதும் சில பெண்களுக்கு இதுபோல் வருவதுண்டு. கவலைப் படவேண்டாம். நல்ல உணவு, ஓய்வு, ஆரோக்கியமான சிந்தனை போதும்.’’

நான்கைந்து மாதங்களுக்கு முன் என் கணவர் திடீரென, தனக்கு மயக்கமாக வருவதாகவும், இரு கண்களிலும் பார்வை தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறினார். அதன்பிறகு ஒரு மாதத்துக்கு, காலையில் எழுந்ததும் மயக்கம் வருகிறது என்றார். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக வேலை பார்த்தது, தூக்கமின்மை, நேரத்துக்குச் சாப்பிடாதது ஆகியவை காரணங்கள் என டாக்டர் சொன்னார். அவர் வயது 37. அவருக்கு வந்திருப்பது குறைவான ரத்த அழுத்த நோயா? அப்படி இருந்தால் கண்பார்வை மங்குமா?’’

- கே.சி.செளந்தர்யா, நாமக்கல்.

‘‘சாதாரணமாக நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் வரவே வராது. அனீமியா போன்ற அதிக ரத்தம் விரயம் ஆகும் குறை பாடு உள்ளவர்களுக்கோ, விபத்தின்போது பாதிக்கப் பட்டவர்களுக்கோ மற்றும் இதயத் துடிப்பு அதிகமாகத் துடிப்பவர்களுக்கோ மட்டும்தான் இது ஏற்படும். இதனால் உடலின் வலு முழுவதும் குறைந்து, உடம்பே ஒருவித குளிர்நிலைக்கு வரலாம். உங்கள் கணவருக்கு இது மாதிரியான பிரச்னைகள் இல்லாததால், அவருக்கு குறைந்த அழுத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் கணவரின் கண்கள் பாதிக்கப்பட்டதற்கும் குறைந்த ரத்த அழுத்தத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பார்வை மங்குவதை அப்படியே விட்டுவிடாமல், தகுந்த கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். எதற்கும் கொஞ்சம் ஓய்வெடுப்பது நல்லது..’’

‘கர்ப்பிணிக்கு அடிக்கடி ஸ்கேன் செய்வது ஆபத்தானதா’, தலைப்பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் மருமகளுக்கு மாதாமாதம் செக்கப் செல்லும்போதெல்லாம் வயிற்றை ஸ்கேன் செய்கிறார் மருத்துவர். ‘அடிக்கடி ஸ்கேன் செய்தால் வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஆகாது, காது கேட்கும் திறன், இதயத்தின் செயல்பாடு உள்ளிட்ட உள்ளுறுப்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும்’ என்று சிலர் எச்சரிக்கிறார்கள். தெளிவு படுத்துங்களேன்…”?

- ரா.தி.பரமேஸ்வரி, பெதவை.

“பொதுவாக, கர்ப்பம் தரித்ததிலிருந்து டெலிவரி வரை நான்கு ஸ்கேன் பரிசோதனைகள் போதுமானது. ஆறாவது வாரத்தில் (ஒன்றரை மாதம்) மேற்கொள்ளப்படும் முதலாவது ஸ்கேன், கருத்தரிப்பை உறுதி செய்யவும், தரித்த கர்ப்பம் கர்ப்பப்பைக்கு உள்ளா, வெளியிலா என்று அறியவும், கருவின் துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

இரண்டாவது ஸ்கேன் 11 - 14 வாரங்களுக் கிடையே (மூன்று - மூன்றரை மாதங்கள்) மேற்கொள்ளப்படுகிறது. குரோமோசோம் கோளாறினால் மூளைவளர்ச்சி குன்றி உருவாகும் ‘டவுண் சின்ட்ரோம்’ பாதிப்பு இருப்பின், இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.அடுத்து (நாலரை மாதங்கள் - ஆறு மாதங்கள்) செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனில் தண்டுவடம், இதயக்கோளாறு, தாய்-சேய் இடையேயான சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்வார் மருத்துவர்.

நான்காவது ஸ்கேன் 36-வது வாரத்தில் (ஒன்பதாவது மாதம்) செய்யப்படுகிறது. குழந்தையின் பொசிஷன், தாய்-சேய் இணைப்புத் திசுவான பிளசான்டாவின் நிலை, பனிக்குட நீரளவு, குழந்தையின் வேறுபட்ட அசைவுகள் இவற்றை ஆராய உதவுவதோடு டெலிவரி தினத்தையும், நார்மலா அல்லது சிசேரியனா என்பதையும் முடிவு செய்யவும் பேருதவியாக இருக்கும். கருவுற்ற தாய்க்கு பி.பி., சுகர் போன்ற பிரச்னைகள் இருப்பின், மாதாமாதம் ஸ்கேன் பார்த்தாக வேண்டும் ஏனெனில், தாயின் இந்த இரண்டு கோளாறுகள் காரணமாக… பனிக்குடத்தில் நீர் வற்றுவது, சேய் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றைக் கண்காணித்து சரியான மருத்துவத்தை பரிந்துரைக்க மாதம்தோறும் ஸ்கேன் அவசியமாகிறது. ஸ்கேன் செய்வதால் காது பாதிக்கும், இதயம் பாதிக்கும் என்பதெல்லாம் செவிவழியாக சொல்லப்படுவதே தவிர, எந்த வகையிலும் நிரூபணமானதில்லை.