Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர், சென்னை.

எனக்குத் தெரிந்த பாட்டி ஒருவருக்கு தற்போது 92 வயது நடந்துகொண்டிருக்கிறது. அவர் 11 பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர். அந்தப் பாட்டி சிறுநீர் கழித்தால் கர்ப்பப்பை வெளியே வந்துவிடுகிறதாம். ஒவ்வொரு தடவை சிறுநீர் கழிக்கும்போதும் கர்ப்பப்பையை உள்ளே தள்ளிவிட்டுக்கொள்வாராம். இப்படியும் நடக்குமா டாக்டர்... இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முடியுமா?

- ஞானம்பிகை, திருவாரூர்.

``அந்தக் காலத்துப் பெண்கள் நிறைய குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். அதனால், கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, மலம் கழிக்கும் பகுதி ஆகியவற்றைச் சுற்றியிருக்கும் தசைநார்கள் அவர்களுக்கு பலவீனமாகிவிடும். அந்தக் காலத்தில் இதை ‘அடி இறங்கிப் போச்சு’ என்பார்கள். இந்தப் பிரச்னை, இரண்டு குழந்தை பெற்ற பெண்களுக்கும்கூட ஏற்படலாம். குறிப்பாக, சுகப்பிரசவம் நடந்த பெண்களுக்கு. பொதுவாக, மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டாலும் பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். சுகப்பிரசவம் நிகழும்போது ஏற்படும் மாற்றங்களாலும் கர்ப்பப்பையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் தசைநார்கள் வெகு சீக்கிரம் பலவீனமாகும். சில நேரங்களில் குழந்தையே பிறக்காத பெண்களுக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படும். அதற்கு அவர்களின் மரபு காரணமாக இருக்கலாம். 45 வயதோ, 95 வயதோ கவலை வேண்டாம்... இந்தப் பிரச்னையை அறுவைசிகிச்சை மூலம் நிச்சயம் சரிசெய்ய முடியும்.’’

அண்மையில் மருத்துவக் காரணங்களுக்காக நான் அபார்ஷன் செய்துகொண்டேன். அப்போது நான் ஆறு வாரங்கள் கர்ப்பமாக இருந்தேன். வஜைனா வழியாக மாத்திரை போட்டு கருவைக் கலைத்தார்கள். அதன் பிறகு எனக்கு மருத்துவர் நிறைய சத்து மாத்திரைகளைக் கொடுத்தார். எனக்கு மாத்திரை சாப்பிடப் பிடிக்காது என்பதால், எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டேன். சில மாதங்கள் கழித்து கைகால்களில் மரத்துப்போன உணர்வு வர ஆரம்பித்தது. `உடலில் பி12 சத்து குறைந்ததால்தான் இப்படி மரத்துப் போகிறது’ என்கிறார் மருத்துவர். அபார்ஷனுக்குப் பிறகு, நான் சத்து மாத்திரைகளைச் சாப்பிடாததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்குமோ?

- கே.வர்ஷா, ஆரணி.

``நீங்கள் சொல்வதுபோல் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. கைகால் மரத்துப் போகிறது என்றாலே, அதற்குக் காரணம் பி12 குறைபாடுதான் என்று சொல்ல முடியாது. அபார்ஷனுக்குப் பிறகு உங்களுக்கு மாதா மாதம் மாதவிடாய் வந்துகொண்டிருக்கிறது என்றால், பிரச்னை எதுவும் இருக்காது. அபார்ஷனுக்கு முன்னர் ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை பாதிப்பு இருந்து, அதனாலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம்.

நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது, ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனை. குறிப்பாக ஹீமோகுளோபின், பி12, ஃபோலிக் அமிலம், சர்க்கரைநோய், தைராய்டு ஆகியவற்றை அறியும் ரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். தேவைப்பட்டால், கர்ப்பப்பையையும் பரிசோதனை செய்ய வேண்டி வரலாம். இந்தப் பரிசோதனைகள் அனைத்தையும் செய்து பார்த்தால்தான் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.’’

நான் சமீபத்தில் ஈ.சி.ஜி எடுத்தேன். அதில், என்னுடைய இதயத்துடிப்பு 110-க்கும் மேல் இருப்பது தெரியவந்தது. ஈ.சி.ஜி ரிப்போர்ட்டில் இதை ‘சைனஸ் டக்கிகார்டியா’ (Sinus Tachycardia) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது என்ன... ஏதேனும் பிரச்னையா?

- ராஜநாரயணன், திருநெல்வேலி.

“சைனஸ் டக்கிகார்டியா என்பது இதயத்துடிப்பு அதீதமாக இருப்பதைக் குறிக்கும். நீங்கள் பயப்படுவதுபோல இது ஒரு பிரச்னையோ, சிக்கலோ கிடையாது. இயல்பானநிலைதான். இயல்பு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதால், ‘அவருக்கு இருக்கும் இதயத்துடிப்பின் அளவு எனக்கு இல்லையே... எனில் நான் இயல்புக்கு அப்பாற்பட்டவனா... இது நோய் பாதிப்பின் வெளிப்பாடா?’ என்றெல்லாம் யோசித்து, குழம்ப வேண்டாம்.

சைனஸ் டக்கிகார்டியா இருப்பவர்கள், மற்றவர்களைவிட சற்று சென்சிடிவ்வாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரித்துவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அடிக்கடி இதயத்துடிப்பு அதிகரிப்பது உடல்நலத்துக்கு நல்லதல்ல என்பதால், பதற்றமாக்கும் சூழ்நிலைகளை இவர்கள் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இதயத்துடிப்பு அதிகரிப்பது தெரியவந்தாலும், அந்த நேரத்தில் நின்று நிதானமாகச் செயலாற்ற வேண்டும். மற்றபடி மருந்தோ, மாத்திரையோ அவசியமில்லை. நிதானமாகச் செயலாற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதயத்துடிப்பு இயல்பு

நிலைக்கு வந்துவிடும்.

அடிப்படையில் இதயத்துடிப்பின் அளவீடு 60 முதல் 100 பீட்ஸ் / நிமிடங்கள் (bpm) இருப்பது இயல்புநிலை. இந்த அளவில், உங்களுக்கு 110 பீட்ஸ் / நிமிடங்கள் என வந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதையும், அவருக்கு நோய் பாதிப்பின் தாக்கம் ஏதேனும் இருக்கிறதா, இல்லையா என்பதையும் வெறுமனே bpm அளவைவைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது.

ஒவ்வோர் ஈ.சி.ஜி-யின் முடிவிலும் இதயம் எந்த அளவில் துடித்திருக்கிறது என்பது கிராஃப் வடிவத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்துதான் மருத்துவர்கள் முடிவைச் சொல்வார்கள். நவீன ஈ.சி.ஜி எந்திரங்களில், ‘உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’ எனும் தகவல்களைச் சொல்லும் வசதிகள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால், இவை எல்லா நேரமும் துல்லியமாக இருப்பதில்லை. எனவே, எல்லா நேரமும் இதை அப்படியே நம்ப முயலாதீர்கள். மருத்துவப் பரிந்துரைமீது நம்பிக்கைகொள்ளுங்கள்.”