Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நவராத்திரி விழா... சுவையான சுண்டல்கள்!

நவராத்திரி... பத்து நாள் கொண்டாட்டம். அந்த பத்து நாட்களும் வீட்டில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு சுண்டல் மற்றும் பலகாரங்கள் படைத்து நெய்வேத்தியம் செய்வதால் வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். நவராத்திரி நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுண்டல்களை வழங்கியுள்ளார் சமையல் கலைஞரான அனுராதா ரவீந்திரன்.

ஸ்வீட் சிக்ஸ்டீன் காரச் சுண்டல்

தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை, மொச்சை, சோயாபீன்ஸ், பச்சைப்பயறு, வேர்க்கடலை - தலா ¼ கப்,

கடுகு, ¼ டீஸ்பூன்,

கறிவேப்பிலை - 2 கொத்து,

பச்சைமிளகாய் - 5,

கொத்தமல்லி இலை பொடியாக - 2 டீஸ்பூன்,

மாங்காய் நறுக்கியது - 3 டீஸ்பூன்,

காராமணி, பட்டர் பீன்ஸ், பச்சைப்பட்டாணி - தலா ¼ கப்,

எண்ணெய் - 3 டீஸ்பூன்,

உப்பு - தேவையானஅளவு,

பெருங்காயதூள் - சிறிது,

எலுமிச்சம் பழம் - 1 மூடி,

தேங்காய் துருவல் - 1 தேங்காய்,

இஞ்சி - 1 துண்டு.

செய்முறை:

வெள்ளை கொண்டைக்கடலை, மொச்சை, சோயா பீன்ஸ், பச்சைப்பயறு முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் எல்லா பொருட்களையும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுதைப் போட்டு வதக்கி வேக வைத்த சுண்டல்களில் உப்பு போட்டு கலக்கி மேலே பொடியாக கட் பண்ணிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாங்காய், தேங்காய் துருவல் தூவி எலுமிச்சம் பழம் பிழிந்து நன்றாக கலந்தால் நவராத்திரி கொலுவிற்கு டேஸ்டி சுண்டல் ரெடி. சுவையோ அள்ளும்.

பார்லி சாபுதானா சுண்டல்

தேவையானவை:

பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம்,

பொட்டுக் கடலை - 1 டீஸ்பூன்,

வறுத்த முந்திரி,

பிஸ்தா - தலா 10,

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,

மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊறவைத்து நீர் வடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி விழுது, மிளகுத்தூள், ஊறவைத்த பார்லி, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறி இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை சேர்த்து கிளறி இறக்கவும்.

ஃப்ரூட் சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய சோளம்,

கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள், பப்பாளி பழத்துண்டுகள் - தலா 1 கப்,

உலர் திராட்சை - 10.

செய்முறை:

முளைக்கட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யா, ஆப்பிள், பப்பாளி பழத்துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையை சேர்த்து கலக்கி அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பர் சுண்டல் ரெடி.

பீச் சுண்டல்

தேவையானவை:

காய்ந்த பட்டாணி - 1 கப்,

தாளிப்புக்கு:

பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு - சிறிதளவு,

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்,

தக்காளி - 1,

வெங்காயம் - 1,

தனியாதூள் - ¾ டீஸ்பூன்,

மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 2,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டு கலக்கி வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி நன்கு பழுத்த தக்காளி கட் பண்ணி வதக்கி உப்பு போட்டு, நன்கு கலக்கி மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள் போட்டு வதக்கி சிறிது நீர் ஊற்றி வேக வைத்த பச்சைப்பட்டாணி சிறிது மசித்து அதில் போட்டு நன்றாக கலக்கி மேலே பொடியாக கட் பண்ணிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான பீச் சுண்டல் ரெடி.

கருப்பு உளுந்து சுண்டல்

தேவையானவை:

கருப்பு உளுந்து - 1 கப்,

கடுகு - ¼ டீஸ்பூன்,

உளுந்தம்பருப்பு - ½ டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 3,

கறிவேப்பிலை - 2 கொத்து,

பெருங்காயதூள், மஞ்சள் தூள் - சிறிது,

தேங்காய் துருவல் - ¼ மூடி,

கொத்தமல்லி - சிறிதளவு,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

1 கப் கருப்பு உளுந்து இரவு முழுவதும் ஊற வைத்து நீரை வடித்து முளைக்கட்டி பின் வேக விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கட் பண்ணினது, பெருங்காயதூள் மஞ்சள் தூள் உப்பு போட்டு கிளறி வேகவைத்த கருப்பு உளுந்து போட்டு நன்கு கலக்கி தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி இறக்கவும். இது இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் ரெடி.

நிலக்கடலை சுண்டல்

தேவையானவை:

நிலக்கடலை - 1 கப்,

கடுகு - ¼ டீஸ்பூன்,

வரமிளகாய் - 2,

பச்சைமிளகாய் - 2,

பெருங்காயதூள், மஞ்சள் தூள் - சிறிது,

கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது, தேங்காய் துருவல், மாங்காய், கேரட் துருவல் - ¼ கப்,

எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

நிலக்கடலையை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய், கடுகு, வரமிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை வதக்கி, பெருங்காயதூள், மஞ்சள் தூள் போட்டு கலக்கி இதில் வேகவைத்த நிலக்கடலை, உப்பு போட்டு கலக்கி மேலே கேரட், மாங்காய், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி, கலக்கி பரிமாறவும். சத்துமிக்க மசாலா நிலக்கடலை சுண்டல் ரெடி.

பாஸ்தா சுண்டல்

தேவையானவை:

மக்ரோனி பாஸ்தா - 1 கப்,

பச்சைப்பட்டாணி - ¼ கப்,

கடுகு - ½ டீஸ்பூன், தேங்காய் துருவல், மாங்காய் துருவல் - தலா ¼ கப், கரம் மசாலா - 1 ஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நீர் கொதித்த பின் பாஸ்தா போட்டு வேகவைத்து நீரை வடிகட்டவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள் எல்லாம் போட்டு கலந்து வேகவைத்த பச்சைப்பட்டாணி, பாஸ்தா, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கலந்து மேலே மாங்காய், கொத்தமல்லி தூவினால் சூப்பரான பாஸ்தா சுண்டல் தயார்.

ராஜ்மா கட்டா மிட்டா சுண்டல்

தேவையானவை:

கறுப்பு ராஜ்மா - 1 கப்,

பச்சை மிளகாய் - 2,

வெல்லம் - சிறிய துண்டு,

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்,

கடுகு, சீரகம் - தலா ¼ டீஸ்பூன்,

தேங்காய் துருவல்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

ராஜ்மாவை 12 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த ராஜ்மா, உப்பு, வெல்லம் சேர்த்து நல்லா கலக்கி கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கினால் புளிப்பும், இனிப்பும் கலந்த கட்டா மிட்டா சுண்டல் ரெடி. பெரியவர் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

நவரத்தின மிக்ஸ்டு வெஜ் சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய ஏதேனும் ஒரு பயறு - 1 கப்,

கேரட் - 1,

வெள்ளரி துண்டுகள் - ¼ கப்,

வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - ½ கப்,

பாதி வேகவைத்த மூன்று கலர் குடைமிளகாய் துண்டுகள் - தலா ¼ கப், தக்காளி - 1,

பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

பனீர் துண்டுகள் - தேவையான அளவு.

செய்முறை:

முளைக்கட்டிய பயறை ஆவியில் வேகவைக்கவும். 3 வித (மஞ்சள், சிவப்பு, பச்சை கலர்) குடைமிளகாய் துண்டுகள் பாதியளவு வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை தாளித்து காய்கறிகளை சேர்த்துக் கலக்கி பனீர் துண்டுகள், வேகவைத்த பயறு, பாதி வெந்த குடைமிளகாய், உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகத்தூள் சேர்த்து கலக்கினால் சத்துக்கள் மிகுந்த வெஜ் சுண்டல்-கலர்ஃபுல்லான சுண்டல் ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

கொண்டைக்கடலை ஃப்ரூட் சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்,

ஆப்பிள் துண்டுகள் - 1 கப்,

மாதுளை முத்துக்கள் - 3 ஸ்பூன்,

திராட்சை பழம் - 20,

வாழைப்பழம் சிறிய துண்டுகளாக - 1 கப்,

செர்ரி - 6,

சாட் மசாலா - 1 டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

தேன் - 2 டீஸ்பூன்,

உப்பு - சிறிதளவு.

செய்முறை:

முளைக்கட்டிய கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக விடவும். ஒரு பாத்திரத்தில் வெந்த கடலை, சின்னதாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழ துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, செர்ரி துண்டுகள், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால் சுண்டல் விரும்பாதவர்களும் சாப்பிட தூண்டும். டேஸ்டி கொண்டக்கடலை ஃப்ரூட் சுண்டல் ரெடி. இது டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல்.

தொகுப்பு: ப்ரியா