தேங்காய்ப்பால் கம்பு பிடி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
கம்பு - 1/4 கிலோ
பச்சரிசி - 50 கிராம்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 10
முந்திரி - 10
கருப்பட்டி - 300 கிராம்
தேங்காய்ப் பால் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
கம்பு, பச்சரிசி இரண்டையும் நெய் ஊற்றி தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காய்ப் பாலில் கருப்பட்டியைக் கரைத்து மாவில் ஊற்றி பிசையவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். பொட்டுக் கடலை, வேர்க்கடலை, பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை தட்டி சேர்க்கவும். இட்லி தட்டில் துணி விரித்து பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும். 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான தேங்காய்ப் பால் கம்பு பிடி கொழுக்கட்டை தயார்.
பலாப் பழ பூரண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
பலாப் பழம் - 10 சுளை
அரிசி மாவு - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளரி விதை - 1 டேபிள் ஸ்பூன்
பரங்கி விதை - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - தேவையான அளவு
எள் - 2 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
பலாப்பழத்தை கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் பச்சரிசி மாவு, உப்பு மற்றும் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெள்ளரி விதை, பரங்கி விதை, தேங்காய்த் துருவல், எள் மற்றும் பொட்டுக்கடலை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும். பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து கலந்து பூரணம் தயார் செய்து கொள்ளவும். பிசைந்த மாவை உருட்டி குழி செய்து பூரணத்தை அதற்குள் வைத்து மூடவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான பலாப் பழ பூரண கொழுக்கட்டை தயார்.
நெய் கார கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 1/4 கிலோ
கேரட் - 1
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை கொத்தமல்லி - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, - தலா 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 7
நெய் - 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக வதக்கவும். வதங்கியதும் பச்சரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கேரட், தேங்காய்த் துருவல் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். தண்ணீர் சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து நெய் ஊற்றி கொத்தமல்லி கீரை தூவி அதை கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.சுவையான நெய் கார கொழுக்கட்டை தயார்.
மசாலா வெஜிடபிள் பூரணக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 1/4 கிலோ
கேரட் - 1
பீன்ஸ் - 2
உருளைக்கிழங்கு சிறியது - 1
பெரிய வெங்காயம் - 1
பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நன்கு வதக்கவும். நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது பூரணம் தயார். புதினாவை கழுவி தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும். அதை வடிகட்டி அந்த தண்ணீரில் சிறிது உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பச்சரிசி மாவை சேர்த்து கொழுக்கட்டை பதத்தில் பிசையவும். அந்த மாவை உருண்டை பிடித்து அதற்குள் பூரணத்தை வைத்து மூடவும். ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான மசாலா வெஜிடபிள் பூரணக் கொழுக்கட்டை தயார்.