Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்!

தீபாவளி என்றாலே வீட்டில் முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பட்சணங்களை தவிர்க்க முடியாது. அதில் கொஞ்சம் வித்தியாசமான மற்றும் சுவையான தீபாவளி இனிப்புகள் வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் சாந்தா.

உருளைக்கிழங்கு ஜாமூன்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - கால் கிலோ,

பால்கோவா - 50 கிராம்,

மைதா மாவு - 100 கிராம்,

சர்க்கரை - 500 கிராம்,

நெய் - சிறிது,

ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,

பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை,

பூராச் சர்க்கரை (bura sugar) - 2 டேபிள்ஸ்பூன்,

ரோஸ் எசென்ஸ் - சில சொட்டுக்கள்.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, மேல் தோலை உரித்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவு, பூராச் சர்க்கரை, நெய், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பால்கோவா என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை ஜாமூன்களாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.அழுக்கை நீக்கி, சிறு கம்பிப் பதம் வந்ததும் இறக்கி ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், எசென்ஸ் சேர்க்கவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு மிதமான தீயில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு ஜாமூன்களை பொரித்தெடுத்து, சூடாக இருக்கும் போதே பாகில் போட்டுக் கலக்கவும். அரை மணி நேரத்தில் ஜாமூன்கள் ஜீராவில் நனைந்து உப்பியிருக்கும். மிருதுவான உருளைக்கிழங்கு ஜாமூனை தீபாவளியின் போது விசேஷ ஸ்வீட்டாகச் செய்து அசத்துங்கள்.

காஜர், கஜு, சேப் கோலா

தேவையானவை:

கேரட் - ¼ கிலோ,

முந்திரி - 100 கிராம்,

ஆப்பிள் - 1,

சர்க்கரை - 300 கிராம்,

நெய் - 100 கிராம்,

ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,

ஆப்பிள் எசென்ஸ் - சிறிதளவு,

பால்- ½ லிட்டர்.

செய்முறை:

கேரட்டை தோல் சீவி பாதியை சிறு துண்டுகளாக நறுக்கவும். மீதியை கேரட் துருவியில் துருவவும். முந்திரியை வறுத்து ஒரு டம்ளர் பாலில் ஊறப் போடவும். கேரட் துண்டுகளை பாலில் வேகவைக்கவும். ஆப்பிளைத் தோல் சீவி துண்டுகளாக்கி அத்துடன் முந்திரி, கேரட்டையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையை ரெட்டைக் கம்பிப்பாகு வைத்து, அரைத்த கலவை, மீதமுள்ள பால் விட்டுக் கிளறவும். துருவிய கேரட்டை நெய்யில் வதக்கி தட்டில் பரப்பி வைக்கவும். கிளறும் போது சிறிது சிறிதாக நெய்விட்டு, பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது ஆப்பிள் எசென்ஸை விட்டு, தாம்பாளத்தில் கொட்டி ஆறியதும், சிறு உருண்டைகளாக உருட்டி, கேரட் துருவலில் உருண்டையை பிரட்டி, பட்டர் பேப்பரில் வைக்கவும். சுவையான கோலா தயார்.

நட்ஸ் மிக்ஸர்

தேவையானவை:

வறுத்த நட்ஸ் வகைகள் - 1 பாக்கெட்,

வறுத்த சன்ஃப்ளவர் விதை - 1 பாக்கெட்,

பொரித்த அவல் - ½ கிலோ,

கார்ன் ஃப்ளேக்ஸ் - 200 கிராம்,

ஓட்ஸ் - பெரிய ரைஸின்,

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - தலா 100 கிராம்,

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவைத்து மசித்தது - தலா 1 கப், மைதா, கடலைமாவு, அரிசி மாவு - தலா 1 கப்,

உப்பு - தேவையான அளவு,

மிளகு - 1 ஸ்பூன்,

மிளகாய் வற்றல் - 4,

வனஸ்பதி - 4 ஸ்பூன்,

சமையல் எண்ணெய் - 250 மில்லி,

பெரிய ஜவ்வரிசி - 100 கிராம்.

செய்முறை:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 1 கப், கடலைமாவு, அரிசி மாவு ½ கப், 2 ஸ்பூன் வனஸ்பதி ஆகியவற்றுடன் உப்பு ேசர்த்து கெட்டியாகப் பிசைந்து, முறுக்கு அச்சில் தேன் குழல் தட்டு போட்டு பிழிந்து வேகவைத்து, நொறுக்கி வைக்கவும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மைதா மாவு, அரிசி மாவு, வனஸ்பதியை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, அப்பளமாக திரட்டி, கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கீறி, அரை செ.மீ பக்க சதுரமாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.பெரிய ஜவ்வரிசி, ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் இவற்றைப் பொரிக்கவும். மிளகையும், மிளகாய் வற்றலையும் பொரித்து, மீதியுள்ள உப்புடன் மிக்ஸியில் பொடி செய்யவும். அசார்டட் நட்ஸ், பொரித்த அவல், சன்ஃப்ளவர் விதை, வேர்க்கடலை, ரைஸின் எல்லாவற்றையும் ஒரு பெரிய பேசினில் கொட்டி மேலே பொடித்த மிளகு, மிளகாய் வற்றலைப் போட்டு குலுக்கி எடுக்கவும். கரகரப்பாக மிகவும் ருசியாக இருக்கும்.

தில்குஷ் கேக்

தேவையானவை:

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி - தலா 100

கிராம், நெய், சர்க்கரை - தலா 300 கிராம்,

தேங்காய் துருவல் - 2 கப்,

ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்,

ஜாதிக்காய் - சிறு துண்டு.

செய்முறை:

பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன் முந்திரிப் பருப்பையும், தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக மைபோல் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.பாகு கம்பிப்பதம் வந்தவுடன் அரைத்த விழுது சேர்த்து கைவிடாமல் கிளறவும். தீயை மிதமாக வைத்து சிறிது சிறிதாக நெய்யை விட்டு கிளறவும். பாகு நன்றாக கெட்டியானவுடன் பூத்து வரும். அப்போது மீதியுள்ள நெய்யை விட்டு ஜாதிக்காய், ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் ஆனதும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும். இது குஜராத்தியர் செய்யும் ஸ்வீட் ஆகும்.

காஜு ஆப்பிள்

தேவையானவை:

முந்திரி - 1 கப்,

சர்க்கரை - அரைகப்,

தண்ணீர் - கால் கப்,

நெய் - 1 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள், சிவப்பு ஃபுட் கலர் - தலா சில துளிகள்,

சிறிய பெயின்ட் பிரஷ் - 1,

கிராம்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் முந்திரியை மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு நன்றாக பாகு காய்ச்சிக் கொள்ளவும். பிறகு அரைத்த முந்திரி பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கிளறவும். சிறிது நேரத்தில் கலவை நன்கு சுருண்டு வரும். சிறிதளவு மாவை கைவிரலால் எடுத்து உருட்டிப் பார்த்தால் உருண்டையாக வரவேண்டும்.அதுதான் சரியான பதமாகும். சரியான பதம் வந்த பிறகு இறக்கி, தட்டில் சிறிதளவு நெய் தடவி மாவை ஊற்றிப் பரப்பி விடவும். மாவு கை பொறுக்கும் அளவிற்கு ஆறியதும், கையில் சிறிது நெய்தடவிக் கொண்டு மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆப்பிள் வடிவத்திற்கு தயார் செய்யவும். பின் இவ்வுருண்டைகள் மீது சிவப்பு நிற ஃபுட் கலரை பிரஷ் செய்து சிறிது நேரம் காயவைக்கவும். இறுதியாக உருண்டையின் நடுவில் சிறிய பள்ளம் பறித்து, கிராம்பினை தலைகீழாக சொருகினால் சுவையான காஜு ஆப்பிள் தயார்.

தேன் காஜா

தேவையானவை:

மைதா - ¼ கிலோ,

வெண்ணெய் - 50 கிராம்,

பலகார சோடா - 2 சிட்டிகை,

அரிசி மாவு - 2 டீஸ்பூன்,

நெய் - ¼ டீஸ்பூன்,

சர்க்கரை - 300 கிராம்,

ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,

எண்ணெய் - தேவைக்கேற்ப,

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

மைதாவுடன் வெண்ணெய், பலகார சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நன்கு பிசறி, அளவாக தண்ணீர் தெளித்துக் கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். மீண்டும் நன்றாக அழுத்திப் பிசைந்து மெல்லிய பூரிகளாக இடவும். அரிசி மாவையும், நெய்யையும் நன்றாக குழைவாக கலக்கவும். ஒரு பூரியின் மேல் நெய்க்குைழவை பரவலாக தடவி சுருட்டி 2 இஞ்ச் துண்டுகளாக நறுக்கி, அதன் மேல் லேசாக விரலால் அழுத்தி விடவும். இப்போது அது கன செவ்வகத்துண்டுகளாக இருக்கும். இதே போல் மீதி பூரிகளின் மேலேயும் அரிசி மாவு, நெய்க் குழைவைத் தடவிச் சுருட்டி துண்டுகளாக்கவும். இதற்கு பேர்தான் காஜா.இந்தக் காஜாக்களை எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும். சர்க்கரையில் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ரெட்டைக் கம்பிப்பதத்தில் பாகுவைத்து, பொரித்த காஜாக்களை சூடாக இருக்கும் போதே பாகில் போட்டு எடுத்து, ஒரு தட்டில் பரவலாக வைக்கவும்.எண்ணெயிலிருந்து எடுத்த உடனே பாகில் சேர்ப்பதால் காஜா பாகை நன்றாக உறிந்து கொள்ளும். எல்லா காஜாவையும் இதுபோல் பாகில் போட்டு எடுத்து விட்டு மீதமிருக்கும் பாகை மறுபடியும் 2 நிமிடம் பாய்ச்சி காஜாக்களின் மேல் பரவலாக ஊற்றவும்.

கோவா சேமியா டிலைட்

தேவையானவை:

சேமியா - ½ கப்,

கோவா - 50 கிராம்,

கேரட் - 1/4 கப்,

முந்திரிப்பருப்பு - 10,

சர்க்கரை - 1¼ கப்,

நெய் - 4 டீஸ்பூன்,

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,

வெள்ளரி விதை அல்லது சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:

கேரட்டை அலம்பி துருவிக்கொள்ளவும். சேமியாவை சிறு துண்டுகளாக்கி நெய்யில் 2 நிமிடம் வறுக்கவும். வாணலியில் 1½ கப் தண்ணீரை கொதிக்க விடவும். மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் நெய் ஊற்றிப் பொடியாக நறுக்கிய முந்திரியை சேர்த்து அரை நிமிடம் வறுத்து கொதிக்கும் நீரை சேர்க்கவும். அதில் வறுத்த சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடவும். சேமியா நன்கு வெந்தபின் துருவிய கேரட்டை சேர்த்து மேலும் சிறிது கிளறி சர்க்கரை, கோவா சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்ந்து நன்கு சுருண்டு வந்ததும் ஏலக்காய் தூள், வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

தொகுப்பு: ப்ரியா