Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.13.7 கோடியில் பாரம்பரியம் மாறாமல் ஊட்டி, குன்னூர் ரயில் நிலைய கட்டுமான பணி தீவிரம்

ஊட்டி : பாரம்பரியம் மாறாமல் புதுப்பொலிவு பெறும் வகையில் ரூ.13.7 கோடி மதிப்பீட்டில் ஊட்டி, குன்னூர் ரயில் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில், 1275 ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக, அம்ரித் பாரத் நிலையம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, இலவச வைபை வசதி, காத்திருப்போர் அறை, கழிப்பிட மேம்பாடு, சுகாதாரம், ஏற்கெனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட புதிய நவீன வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் தேர்வு செய்யப்பட்டது. ஊட்டி ரயில் நிலையம் ரூ.7 கோடியிலும், குன்னூர் ரயில் நிலையம் ரூ.6.7 கோடியிலும் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் பணிகள் துவங்கின. ஊட்டி ரயில் நிலையத்தில் முகப்பு பகுதி இடிக்கப்பட்டு, விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முகப்பு பகுதி இடிக்கப்பட்டு வருவதால், ரயிலில் வரும் பயணிகள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தை பொலிவுபடுத்தும் பணியும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதேபோல், குன்னூர் ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,“ஊட்டி மற்றும் குன்னூர் ரயில் நிலையங்கள் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான நீலகிரி மலை ரயில் பாதையில் அமைந்துள்ளன. அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ஊட்டி மற்றும் குன்னூர் ரயில் நிலையங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காண உள்ளன. இந்த மேம்பாட்டு பணிகளால் ஊட்டி மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு நவீன வசதிகள் செய்யப்பட்டு, ரயில் நிலையங்கள் அழகுபடுத்தப்படும். பிரதான நுழைவுவாயிலின் முகப்பை உயர்த்தி, முகப்பு பகுதியை பொலிவுபடுத்த எல்இடி விளக்குகள் அமைக்கப்படும்.

முன்பதிவு அலுவலகங்கள், காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறைகளின் உட்புறங்களும் மேம்படுத்தப்படும். பயணிகளுக்கு வழிகாட்ட எல்இடி., அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு கைப் பிடியுடன் கூடிய சாய்வு தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பை உறுதி செய்ய நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன’’ என்றனர்.