புதுடெல்லி,: திமுக துணைப் பொதுச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் பற்றிய கேள்விகளை மக்களவையில் எழுப்பினார். அதன் விவரங்கள்: ஒன்றிய நெடுஞ்சாலை துறையால் நாடு முழுவதும் இயக்கப்படும் சுங்கச் சாவடிகள் எனப்படுகிற டோல் கேட்டுகளின் எண்ணிக்கை மாநில வாரியாக எவ்வளவு? குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனை டோல்கேட்டுகள் இயங்குகின்றன?
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் கட்டண வசூலில் ஈடுபட்டு வரும் டோல்கேட்டுகளின் எண்ணிக்கை எத்தனை? விதிகளை மீறி தொடர்ந்து கட்டணம் வசூலிக்க என்ன காரணம்? இந்த சுங்கச்சாவடிகளைத் தணிக்கை செய்து, பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ஒப்பந்ததாரர்களை பொறுப்பேற்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா?
அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? நாடு முழுதும் தினசரி பயணிகள் மற்றும் சிறு வணிகர்கள் மீதான சுங்கக் கட்டணச் சுமையை அரசு மறுபரிசீலனை செய்து, நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலித்துள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.