கோவை, நவ.27: கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, சிகிச்சை முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ரத்த சோகை, போதுமான ஊட்டச்சத்து, உடல் எடை குறைவு போன்ற பாதிப்புகள் உள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், அதை தீர்க்க அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல பிரிவினர் தீவிரம் காட்ட வேண்டும். கூடுதல் நோய் மற்றும் உயரம் குறைவாக உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கையான முறையில் பிரசவம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது.
மேலும் முதல் குழந்தைக்கு சிசேரியன் செய்தவர்களுக்கு இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து பிரசவத்திற்கு வரும் போது சிசேரியன் மூலமாக குழந்தை பெற வேண்டிய நிலைமை இருக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயற்கையான முறையில் பிரசவம் நடக்க வாய்ப்புள்ள கர்ப்பிணிகளை மட்டுமே வைத்து சிகிச்சை தர வேண்டும். அபாய கட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்க வேண்டும். அபாய கட்ட கர்ப்பிணிகளுக்கு உடனடியாக சிகிச்சை, தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவையாக இருக்கிறது.
எனவே பிரசவ காலத்திற்கு உரிய காலத்திற்கு முன்பாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வட்டார சுகாதார மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமம் நகர்ப்பகுதியில் சிசேரியன் குறைக்கும் வகையில் கர்ப்பிணிகளுக்கு உரிய ஆலோசனை, உணவு பழக்கம் குறித்து சொல்லி தர வேண்டும் என சுகாதார துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

