கோவை, டிச. 1: கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் நாசா இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஆப் சேலஞ் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் குளோபல் வேட்பளராக பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாணவர்கள் அணி எக்ஸோபிளனட் பிரிவில் போட்டியிட்டனர். இப்பிரிவில் உலகம் முழுவதும் 205 அணிகள் போட்டியிட்ட நிலையில், கோவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அணி முதலிடம் பிடித்தது. இந்த வெற்றி பெற்ற அணியில் மாணவர்கள் மவுலி, யுகேஷ்வரன், தங்கபாண்டி, நவீன் குமார், சுனில், கமலேஷ் குமார் இடம்பெற்றிருந்தனர். ஆசிரியர்கள் சபரி விக்னேஷ், நாராயணசாமி, அஸ்வின் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் சிவகுருநாதன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

