Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுவர்களிடையே விண்வெளி ஆர்வம் அதிகரிப்பு விண்வெளி துறையில் 200 புதிய ஸ்டார்ட் அப்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 124 வது பதிப்பில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.அவர் பேசியது: கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுகளாகட்டும், அறிவியலாகட்டும், கலாசாரமாகட்டும், நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. சமீபத்தில் தான் விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியுள்ளார்.

சுபான்ஷூ சுக்லா தரையிறங்கியபோது மக்கள் சந்தோஷமடைந்தனர். அனைவர் இதயங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. கடந்த 2023 ம்ஆண்டு சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறுவர்கள் மனதிலே புதிய ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம், விண்வெளி விஞ்ஞானியாவோம் என்று சிறுவர்கள் கூறுகிறார்கள்.

சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. விண்வெளித்துறையில் ஸ்டார்ட் அப்களும் அதிகரித்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 50க்கும் குறைவான ஸ்டார்ட் அப்கள் இருந்த நிலையில் இன்று, 200க்கும் மேல் உள்ளன. சில வேளைகளில் எங்கே மிக அதிகமான இருள் கவிந்திருக்கிறதோ, அங்கிருந்துதான் பேரொளி பீறிட்டுக் கொண்டு புறப்படும்.

இப்படிப்பட்ட எடுத்துக்காட்டு ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன் இந்த மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் வன்முறை அதிகமாக இருந்தது. இதனால் இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பஸியா என்ற இடத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் சாகு என்ற நக்சலைட்டு வன்முறையை கைவிட்டு விட்டு மீன் வளர்ப்பு தொழிலில் இறங்கினார்.

அவரை போலவே பல நக்சலைட்டுகளும் இந்த தொழிலிலில் ஆர்வம் காட்டினர். இன்று பாஸியா வட்டாரத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு காலத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் இன்று மீன்பிடி வலையை கையில் வைத்துள்ளனர். இவ்வாறு பேசினார்.