Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகள் நலம்

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி

6 முதல் 12 வயது வரை…

6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் அவர்களின் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது, உடல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு, உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். இந்தப் பழக்கங்களை கடைபிடிக்கும் குழந்தைகள், ஆழ்ந்த அறிவும், உறுதியான உடலும் கொண்டு எதிர்காலத்தில் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாக அமைவர். இதற்கான முதல்படி பெற்றோர் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை நன்றாக ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும்.இதற்கான வழிமுறைகள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

உணவு முறை

6-12 வயது குழந்தைகள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களுடைய உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். அந்தவகையில், அவர்களின் உணவு சரிவிகிதமாக இருப்பதை உறுதி செய்வது பெற்றோரின் கடமை ஆகும்.ஒருநாளில் மாவுச்சத்து, புரதச்சத்து, பழங்கள், காய்கறிகள், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் நட்ஸ், உலர்பழங்கள் ஆகிய அனைத்துவித உணவுகளும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் மாவுச்சத்து கால் பகுதியும், புரதச்சத்து கால் பகுதியும் மீதம் உள்ள அரைப்பகுதி காய்கறிகள் மற்றும் பழங்களின் கலவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பிஸ்கட் வகைகள், கேக் வகைகள், டெஸர்ட் வகைகள், ஐஸ்கிரீம், சாக்லேட், பீஸா, பர்கர், சிப்ஸ் வகைகள், பொரித்த உணவுகள், கிரீம் வகைகள், குளிர்பானங்கள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.சத்தான உணவுகளை குழந்தைகள் எடுத்துக் கொள்ள ஊக்குவிக்க செய்ய வேண்டியவை

காலைப் பொழுதில் அவரவருக்கு வேலைகள் இருப்பதால், குறைந்தபட்சம் இரவு நேர உணவையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடும்போது தொலைக்காட்சி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பல்வேறு உணவு வகைகள் எவ்வாறு விளைவிக்கப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.கடைத்தெருவுக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் போது குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் குறித்தும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுக்கவும் வழிகாட்ட வேண்டும்.

நொறுக்குத் தீனிகளை வாங்கி டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக பழங்கள் கொடுத்து பழக்குங்கள்.குழந்தைகள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்கள் உடல் எடை சீராக இருக்கும்.ரத்தசோகை, சர்க்கரை நோய், இருதய நோய் ஆகிய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிறுவயதில் இருந்தே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைபிடித்தால் வளர்ந்த பிறகும் ஆரோக்கியமாக வாழலாம். மேலும், இந்த ஆரோக்கியமான பழக்கவழக்கத்தால் அவர்களது அடுத்த தலைமுறையினரும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

தூக்கம்

6- 12 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு 9-11 மணி நேரம் தூங்க வேண்டும். இதுவே ஆரோக்கியமான தூக்கம் ஆகும்.இரவில் நேரத்தோடு தூங்கி 9-11 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கப்பெற்ற குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி தரம், அவர்களுடைய பழக்க வழக்கங்கள், நடத்தை போன்றவை சிறப்பாக அமைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இவர்கள் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பா். அவர்களின் ஞாபகசக்தியும் அதிகரிக்கும்.

சிறந்த தூக்கத்திற்கான வழிமுறைகள்

தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வதும் காலையில் கண் விழிப்பதும் சிறந்தது.தூக்கத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு திரைகளைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினசரி ஒருமணி நேரமாவது குழந்தைகளை விளையாட பழக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு இரவில் நல்ல தூக்கம் வரும்.தூங்க செல்வதற்கு முன்பு பல் தேய்க்க வேண்டும். பின்னர், இறுக்கமில்லாத தளர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு தூங்க பழக்க வேண்டும். குழந்தைகளை தூங்க வைக்கும்போது பெற்றோர், குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது, இனிமையான பாடல்களை கேட்க செய்வது போன்றவற்றை செய்யலாம்.

தூக்கம் குறைவதால் வரும் பாதிப்புகள்

*வளர்ச்சி குறைபாடு

*நடத்தையில் பிரச்னைகள்

*கல்வியில் பின் தங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

விளையாட்டுகள்

குழந்தைகள் தினசரி ஒரு மணி நேரமாவது நன்கு ஓடியாடி விளையாடுவதால் அவர்களுக்கு உடல் வலிமை, மற்ற குழந்தைகளோடு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக விளையாடும் தன்மை போன்றவை அவர்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடித்தளமாக அமைகிறது.மேலும், உடல் வலிமையுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க உடற்பயிற்சி மிகவும் உதவுகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் விளையாட்டுப் பழக்கம் உதவுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

* வேகமாக நடப்பது, ஓடுவது

* சைக்கிள் ஓட்டுவது

* கால்பந்து விளையாடுவது

* இறகுப்பந்து விளையாடுவது

* கம்பிகளில் ஏறுதல்

* ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள்

நீச்சல் பயிற்சி யோகா போன்றவை ஆகும்.குழந்தைக்கு பிடித்தமான விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாட அனுமதியுங்கள். அதுபோன்று பல்வேறு விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.பொழுதுபோக்காக தொலைக்காட்சி, செல்போன் பார்ப்பதை தவிர்த்து பூங்காவிற்கு அழைத்து செல்வது, குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுகளை விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்துங்கள்.

வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பூங்கா, பள்ளி, கடைகளுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்ல பழக்க வேண்டும்.வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை செய்ய பழக்க வேண்டும்.வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிக்க பழக்கப்படுத்த வேண்டும்.திரைநேரத்தை ஒருமணி நேரத்திற்கும் குறைவாக பயன்படுத்த பழக்குவது மிகச் சிறந்ததாகும். அவர்கள் விளையாட தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கித் தரவேண்டும்.

குழந்தைகளின் அறிவுத் திறனை மேம்படுத்தக் கூடிய செயல்பாடுகள்

குழந்தைகளுக்கு கதைகள் சொல்லித் தருவது, அறிவியல் உண்மைகளை சொல்லித் தருவது, செய்திதாள்கள் வாசிக்க கற்றுத் தருவது போன்றவற்றை பழக்க வேண்டும்.கதைகள் மூலம் அவர்களின் கற்பனைத் திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன், உணர்ச்சி நுண்ணறிவு ஆகிய திறன்களை மேம்படுத்தும். இசை மற்றும் இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுத் தருவது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும். மேலும், மன அழுத்தம் போன்ற மனநிலை பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே வரலாற்று கதைகளை சொல்லித் தருவதன் மூலம் அவர்களது கற்பனைத் திறனை, சமயோசித அறிவுத் திறன், கேள்வி கேட்கும் தன்மை, நமது முன்னோர்களின் வாழ்க்கைமுறை, நமது பாரம்பரியம் பற்றிய அறிவு போன்றவற்றை பெறுகின்றனர்.இதனால், எந்தவொரு செயலிலும் விடாமுயற்சி மற்றும் வெற்றி பெறுவதற்கு வேண்டிய தகுதிகள் போன்றவற்றை அறிந்து கொள்கின்றனர். படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வழிகள் வீட்டில் பள்ளிப் பாடத்தை படிக்கும் நேரத்தை நிர்ணயித்து படிக்க பழக்கப்படுத்துங்கள்.

வீட்டில் கவனச்சிதறல் இல்லாத ஒரு இடத்தையும் சூழ்நிலையையும் படிப்பதற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தினசரி படிக்கும் பழக்கம் அவர்களுக்கு நேர மேலாண்மையை கற்றுக் கொடுக்கும். மேலும், அவர்கள் பாடங்களைப் படிப்பதை தள்ளிப்போடுதல் தவிர்க்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தையும் உண்டாக்குகிறது.

அவர்கள் அமைதியாகவும், நிதானமாகவும் தங்கள் பாடங்களைப் படித்து கல்வியில் சிறந்தவர்களாக விளங்க உதவுகிறது. குழந்தையின் முயற்சிக்கும், அவர்கள் பெறும் வெற்றிக்கும் பாராட்டு வழங்க வேண்டும். அது அவர்களை மேன்மேலும் படித்து சாதிக்க ஊக்குவிக்கும்.குழந்தைகள் கருணை, பொறுப்பு, மரியாதை ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்றுக் கொள்ள குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வழிகாட்ட வேண்டும்.

குழந்தைகள் நேர்மறையாக நடக்க, பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.குழந்தைப் பருவத்தில் உருவாகும் நல்ல பழக்கவழக்கங்கள் வாழ்நாள் முழுதும் தொடரும். மேலும் குழந்தைகள் நல்ல பொறுப்புள்ள மனிதர்களாக, குடிமக்களாக எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி வாய்ந்தவர்களாக விளங்குவர்.இதற்கான அடித்தளத்தை உருவாக்க பெற்றோருடன் சேர்ந்து சமூகமும் செயலாற்ற வேண்டும்.