Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆற்றலை அதிகரிக்கும் சியா விதைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் சாந்தி காவேரி

பழங்காலம் முதலே வரலாற்றில் முக்கிய உணவுப் பொருளாக பயன்பாட்டில் இருந்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஃபுட் என்னும் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது சியா விதைகள். உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் மக்களின் விருப்ப உணவாகவும் மாறி வருகிறது. சியாவில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று உணவியல் நிபுணர் சாந்தி காவேரி தெரிவித்தவை:

சியா விதைகள்

கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும் சியா விதைகளின் தாவரவியல் பெயர் salvia hispanica. இது புதினா தாவர இனத்தைச் சார்ந்தது. மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மாயன் மற்றும் அஸ்டெக் இன மக்கள் போரின்போது பயன்படுத்தப்படும் ஆற்றல் மிக்க உணவாகும். சியா என்றால் மாயன் மொழியில் ஆற்றல் என்று பொருள்.

ஒரு தேக்கரண்டி சியா விதைகள்

24 மணி நேரம் வரை, ஆற்றலை நீட்டிக்கச் செய்யும்.

ஆய்வுகள் என்ன சொல்கிறது?

பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் படி, நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாகவே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை சியாவிதைகள். முக்கியமாக புதினா குடும்பத்தைச் சார்ந்த சியா செடிக்கு இயற்கையாக இருக்கும் வாசனைக்கு பூச்சிகள் இவற்றை அண்டுவதில்லை. இதனால், பூச்சி மருந்துகளும் தெளிக்கப்படுவதில்லை என்பதால் மிகவும் பாதுகாப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சியா விதையில் உள்ள ஊட்டச்சத்துகள்

ஒரு அவுன்ஸ் அதாவது 28 கிராம் எடையுள்ள சியா விதையில் ஃபைபர் -11 கிராம், புரோட்டீன் - 4 கிராம், கொழுப்பு - 9 கிராம் ( இதில் 5 கிராம் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது), கால்சியம் - 18 சதவீதம், மாங்கனீஸ் - 30 சதவீதம், மெக்னீசியம் - 30 சதவீதம், பாஸ்பரஸ் - 27 சதவீதம்

அடங்கியிருக்கிறது.

11 அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள சியா விதையில், 9 மிக முக்கியமான அமினோ அமிலங்களான Lysine, Leucine, isoleucine, methionine, threonine, tryptophan, phenylalanine, valine and histadine போன்றவை இருப்பது கூடுதல் சிறப்பு.மேலும் போதுமான அளவு துத்தநாகம், வைட்டமின்பி3(நியாசின்), பொட்டாசியம், வைட்டமின் பி1 (தயமின்) மற்றும் வைட்டமின் பி2 என ஒரு முழு ஊட்டச்சத்து நிறைந்த விதையாக இருக்கிறது. வெறும் 28 கிராம் அதாவது 2 தேக்கரண்டி அளவே உள்ள சியா விதையில் 137 கலோரிகள் மற்றும் செரிமான கார்போஹைட்ரேட் ஒரு கிராம் அளவில் மட்டுமே இருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இதிலிருக்கும் ஃபைபர் போக மிச்சம் இருப்பது 101 கலோரிகள் மட்டுமே.

குறைந்த கலோரி..

அதிகப்படியான ஊட்டச்சத்து…

குறைந்த கலோரிகள் கொண்டதும், அதிகப்படியான ஊட்டச்சத்து மிக்கதுமான சிறந்த உணவாக சியா விதைகள் மட்டுமே இருக்க முடியும். சியா விதைகள், முழு தானியம், ஆர்கானிக் மற்றும் க்ளூட்டன் இல்லாத உணவாகவும் இருப்பது இன்னும் சிறப்பு.

மருத்துவ பயன்கள்

உடலில் உற்பத்தியாகக் கூடிய ஃ்ப்ரீரேடிகல்ஸ், மத்திய நரம்பு மண்டலப் பகுதியை பாதித்து, வயதானவர்களுக்கு வரக்கூடிய அல்சைமர், டிமென்ஷியா போன்ற மறதி நோய்களையும், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தி, இதயநோய் பாதிப்புகள் மற்றும் முடக்குவாதம், புற்றுநோய் போன்ற அழற்சி நோய்களுக்கும் காரணமாகின்றன. ஆனால், சியா விதையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகள், உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிகல்ஸ் உற்பத்தியை எதிர்த்து போராடுகின்றன. கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் செரிமான உறுப்புகளைத் தூண்டுகிறது. மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கிறது.

சியா விதையில் இருக்கும் கார்போ ஹைட்ரேட் 40 சதவீதம் நார்ச்சத்து மிகுந்ததாக இருப்பதால் எளிதில் செரிக்கக் கூடியது. நார்ச்சத்து இதை நீரிழிவு மற்றும் உடல்பருமன் நோய் உள்ளவர்களும் கார்போஹைட்ரேட் பயமின்றி தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.மற்ற தாவர உணவுகளில் இருப்பதைக் காட்டிலும், இவற்றில் புரதச்சத்து மிகுந்துள்ளது. எடை இழப்பிற்கு பெரிதும் உதவும் சிறந்த ஊட்டச்சத்தான புரோட்டீன் பசி உணர்வை கட்டுப்படுத்தக் கூடியது. ஃப்ளேக்ஸ் விதைகளைப் போன்றே, சியா விதைகளிலும் ஒமேகா3 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சால்மன் வகை மீனில் இருப்பதை விட அதிகம்.

புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் மூன்றும் இதயநோயிலிருந்து பாதுகாப்பவை. பால் பொருட்களைவிட இதில் கால்சியம் மிகுந்துள்ளதால் எலும்பு உறுதிக்கு நன்மை செய்கிறது. சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற தொற்று நோய்களுக்கு எதிராக போராடும்போது அழற்சிகளை ஏற்படுத்தும். இது நல்லவிஷயமாக இருந்தாலும் சில நேரங்களில் தோல், எலும்புகளில் உண்டாகும் அழற்சி நாள்பட்ட நோய்களுக்கு காரணமாகி விடக்கூடும். சியா விதைகள் இதுபோன்ற நாள்பட்ட அழற்சிகளை குறைக்கிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான்பிரான்சிஸ்கோ மருத்துவ மையத்தின் அறிக்கைப்படி சியா விதையில் இருக்கும் Alpha - linoleic Acid பெண்களை மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடும் கூறுகள் இதில் இருப்பதால் புற்றுநோய்க்கட்டிகளை வளரவிடாமல் தடுக்கிறது.இவற்றிலிருக்கும். மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, வளர்சிதை மாற்றத்தையும் தூண்டுகின்றன.

ஆழ்ந்த தூக்கத்திற்கு முக்கியமானவை செரட்டனின் மற்றும் மெலட்டனின் ஹார்மோன்கள் உடலில் இருக்கும் tryptophan என்னும் அமினோ அமிலம் மூலம்தான் சுரக்கின்றன. சியா விதையில் இருக்கும் இந்த tryptophan தூக்கக் குறைபாடுகளை களைந்து அமைதியான உறக்கத்தை வரவழைப்பதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது.

அழகுக்கும் உதவும் சியா

கூந்தல் மற்றும் தோல் பராமரிப்பில் சியா விதைகளின் பங்கு அதிகம். சியாவிதையை ஃபேஸ் மாஸ்க்காக தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தோலில் சீபம் உற்பத்தியை கட்டுப்படுத்தி பருக்கள் வராமல் தடுக்கிறது. பருக்களின் தழும்பையும் குறைப்பதால், மாசு, மருவற்ற முகத்தைப் பெற முடியும்.தோலில் ஈரப்பதத்தை தக்கவைப்பதால், முகத்தின் மேற்புறத்தோலை மிருதுவாக வைத்துக் கொள்ள முடியும்.கை, கால்களின் முட்டி, கணுக்கால் போன்ற இடங்களில் சியாவிதை பேஸ்ட்டை தடவி வருவதால் அந்தப்பகுதியில் இருக்கும் கருமை மற்றும் தோலின் சொரசொரப்புத் தன்மை நீங்கிவிடும்.

சியாவிதையில் இருக்கும் ஒமேகா3 கொழுப்பு அமிலம், தோலின் கொலாஜன் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ வயதாவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கி, இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதிலிருக்கும் துத்தநாகம் சிறந்த ஆன்டி ஆக்சிடன்டாக தோலில் வேலை செய்கிறது. இதனால், தோலின் மேல்பகுதியில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, தோலை உறுதியாக்குகிறது.கூந்தலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, உறுதியாக்குகிறது. சியா விதையில், இருக்கும் கெரட்டின் புரதச்சத்து, முடியின் வேர்க்கால்கள் வறண்டு போகாமல் ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுத்துகிறது. இதனால் கூந்தல் சேதமடைவதை தடுக்க முடியும்.

இதிலுள்ள தாமிரச்சத்து கூந்தல் வளர்ச்சிக்கு ஆதாரமான மூலப்பொருள் ஆகும். கூந்தல் விரைவில் வெள்ளையாவதை தடுப்பதோடு, இயற்கையான கருமையை தக்க வைக்கிறது. இது, தலையின் ஸ்கால்ப் பகுதியில் எண்ணெய்ப் பசையை தக்க வைத்து, வறண்டு விடாமல் பராமரிப்பதால், தோலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இந்த தாமிரச்சத்து அவசியம்.சியா விதை துத்தநாக சத்துக்கு ஆதாரமாக இருப்பதால் முடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்ந்த இடத்திலும், வேகமாக மீண்டும் புதிய முடி உருவாகவும் உதவுகிறது.

சியா விதைகள் உட்கொள்ளும் முறைகள்

ஒரு நாளைக்கு 20 கிராம் (ஒன்றரை தேக்கரண்டி) அளவில், இரண்டு வேளைகள் எடுத்துக் கொள்ளலாம். சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதும் எளிது. காய்கறி, பழ சாலட், சாஸ், புட்டிங், ஆம்லெட் மற்றும் வெரைட்டி ரைஸ் போன்றவற்றின் மீது வறுத்த சியா விதைகளை தூவியும் சாப்பிடலாம்.

ஊற வைத்த சியா விதைகளை ஜூஸ், மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவற்றோடு சேர்த்தும் சாப்பிடலாம். ஊறவைத்த பின் சியா விதைகள் ஜெல் போன்று ஆகிவிடுவதால் எந்த உணவோடும் சேர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சிக்கு முன் சியா டிரிங்ஸை எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு தேவையான ஆற்றலை பெற முடியும்.