சென்னை: பேருந்து நிறுத்த கூட்ட நெரிசலில் செல்போன் பறித்த வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் முக்தார் ஆலம் (27). இவர் ரயில் மூலம் நேற்று முன்தினம் சென்னை ெசன்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். பிறகு புழல் பகுதியில் வேலை செய்யும் நிறுவனத்திற்கு செல்ல பூங்கா பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது முக்தார் ஆலம் பேருந்து ஏறும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து முக்தார் ஆலம் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்த வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ஆனந்த் (27) என தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பயணிகளிடம் திருடிய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


