சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
சென்னை: சென்னையில் 1,383 நபர்களிடமிருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை பெற்று அகற்றிடும் புதிய நடவடிக்கை கடந்த அக்டோபர் 11ம் தேதி தொடங்கப்பட்டது.
அதன்படி, இதுவரை 10 சனிக்கிழமை நாட்களில் 1,383 நபர்களிடமிருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 95 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 34.42 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைறு நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் அல்லது சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் அல்லது சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.
இதன் அடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


