வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மணலி- சடையன்குப்பம் சாலையில் ரூ.15 கோடியில் புதிய தரைப்பாலம் : அதிகாரிகள் ஆய்வு
மணலி, டிச.9: மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க மணலி நெடுஞ்சாலை - சடையன்குப்பம் இணைப்பு சாலையில் ரூ.15 கோடியில் தரைப்பாலம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டு, சடையன்குப்பம், பர்மா நகர் இருளர் காலனி போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் தொழிலாளர்கள், வாகனங்களிலும், நடந்தும் மணலி நெடுஞ்சாலை- சடையன்குப்பம் இணைப்பு சாலையில் உள்ள கால்வாய் பாலத்தை கடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மழை காலத்தில் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, இந்த உபரி நீர் கால்வாய் பாலம் அருகே உள்ள சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி, இந்த வழியாக போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக உள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மணலி நெடுஞ்சாலை- சடையன்குப்பம் இணைப்பு சாலையில் உபரி நீரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தரைப்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி, மணலி மண்டல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி ரூ.15 கோடி செலவில் இந்த சாலையில் சுமார் 500 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலத்தில் தரைப்பாலம் அமைக்கவும் பாலத்திற்கு கீழே புழல் ஏரி உபரி நீர் தடையில்லாமல் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு தரைப்பாலம் அமைக்கப்பட உள்ள பகுதிகளை மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், சென்னை மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் தேவேந்திரன், கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஆவண நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரைப்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மழைக்காலங்களில் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் சடையன்குப்பம் அருகே கால்வாய் வழியாக செல்கிறது. மணலி நெடுஞ்சாலை - சடையன்குப்பம் இணைப்பு சாலை அருகில் உள்ள நீர்வளத் துறைக்கு சொந்தமான நிலத்திலும் பாய்ந்து கடந்து செல்லும். தற்போது இந்த உபரி நீர் தேங்கக்கூடிய நீர்நிலை நிலங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் உபரி நீர் சீராக செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்க படுகின்றனர். எனவே நீர்நிலை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும். மணலி நெடுஞ்சாலை- சடையன்குப்பம் இணைப்பு சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைவாக துவக்க வேண்டும், ஏற்கனவே துவங்கப்பட்ட ஆண்டார்குப்பம்- சடையன்குப்பம் இணைப்பு சாலை பணியையும் துரிதமாக முடிக்க வேண்டும்,’ என்றனர்.


