அம்பத்தூர், நவ.1: அம்பத்தூர் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதில்சுவர் இடிக்கப்பட்டது. அம்பத்தூர் அருகேயுள்ள ஒரகடத்தில் சுமார் 2 ஏக்கர் மயானம் உள்ளது. இதனை, ஒரகடம் மற்றும் பானு நகர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 2 பகுதி மக்களும் இந்த மயானத்திற்கு அவரவர் பகுதிக்கு ஏற்ப இரு வழிகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த மயானத்தில், பானு நகர் பகுதி மக்கள் பயன்படுத்திய வழியை அடைத்து சுற்றுசுவர் கட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரகடம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சுற்றுச்சவரை இடித்து மீண்டும் அந்த பகுதியில் வழி அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரகடம் கிராமத்தினருக்கும், பானு நகரை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஜமீஷ் பாபு, உதவி ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் காவல்துறையினர் இரு தரப்பினரிடம் பேசி சமாதானம் செய்தனர். பினர், சுற்று சுவர் இடிக்கப்பட்டு பழைய நிலையில் பானு நகர் வழியாக மயானத்திற்கு செல்லும் வகையில் வழியும் அமைத்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
+
Advertisement 
 
 
 
   