சென்னை, ஆக.4: திருவல்லிக்கேணி பகுதியில் சூடோ எபிட்ரின் என்ற போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஏஜென்ட்டை போலீசார் கைது ெசய்தனர்.
திருவல்லிக்கேணி லால்பேகம் தெருவில் சிலர் போதை பொருள் விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி அப்பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சூடோ எபிட்ரின் என்ற போதை பொருள் விற்பனை செய்த பீர் முகமது (46), சையது ஜலாலுதீன் (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ சூடோ எபிட்ரினை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஏழுகிணறு பகுதியை சேர்ந்த கமல் அலி (53) என்பவரை நற்று முன்தினம் கைது செய்தனர். இவர், சூடோ எபிட்ரின் என்ற போதை பொருள் வாங்கி, சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஏஜென்ட்டாக செயல்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.