Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடவாக்கம் கிராமத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த, தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில், ஒப்பந்த பணியாளர்களாக 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பாக நேற்று தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

இதில், தினமும் 8 மணி நேரம் வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை வாங்குவதை நிறுத்த வேண்டும், அப்படி கூடுதலாக வேலை வாங்கும் நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 7ம்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். பணியின்போது விபத்தில் இறந்த தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும். இரவுநேர பணி செய்யும் தொழிலாளர்களுக்கு இரவு படியாக ரூபாய் 300 வழங்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்படும் தேசிய மற்றும் பண்டிகை கால விடுப்புகளை முறையாக வழங்க வேண்டும். தொழிலாளர் சட்டப்படி தரமான இலவசமாக உணவு வழங்க வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் சீருடை வருடத்திற்கு இரண்டு ஜோடி வழங்க வேண்டும். தொழிலாளர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். வருடா வருடம் தொழிற்சாலை லாபத்திற்கு ஏற்றவாறு 20 சதவீதம் போனஸும், ஊக்க தொகையாக 10,000 வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு போதுமான கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெயிலில் அமர்ந்து போராடியவர்களில் 5 பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதனைகண்ட, போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.