Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் முடங்கியது பிஎஸ்என்எல் சேவை: பயனர்கள் கடும் அவதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று சுமார் 8 நேரம் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் பயனர்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனியார் செல்போன் நிறுவனங்கள் உள்ள போதிலும், கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களில் பலர் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சிம்கார்டுகளையே பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், காவல் நிலையங்கள், பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏராளமான அரசுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் தொலைபேசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் பைபர் கேபிள் கணினியுடன் இணைக்கப்பட்ட நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஜூலை 11ம் தேதி சுமார் 5 மணி நேரம் திடீரென பிஎஸ்என்எல் சேவைகள் முடங்கின. இதனால் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் நேற்று காலை 8 மணியளவில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பிஎஸ்என்எல் செல்போன், டெலிபோன், நெட் சேவைகள் மொத்தமாக முடங்கின. பிற்பகலில் சிக்னல் செயல்பட்டாலும் வீக் ஆக இருந்தது. பின்னர் மீண்டும் சிக்னல் கிடைக்காமல் இருந்தது. இதனால் பலர் நேரடியாக விருதுநகர் பிஎஸ்என்எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சென்று அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அங்கிருந்தவர்கள் உரிய பதிலளிக்காமல் அலுவலக கேட்டை இழுத்து மூடினர். இதனால் செய்வதயறியாது வாடிக்கையாளர்கள் திரும்பிச் சென்றனர். பின்னர் மாலை 4 மணியளவில் தான் மீண்டும் சேவைகள் செயல்படத் துவங்கியது.

இது குறித்து, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் பாவாலியைச் சேர்ந்த முத்துக்குமார் கூறுகையில்,``சமீபத்தில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தின. இதனால், பிஎஸ்என்எல் சேவைக்கு வாடிக்கையாளர்கள் பலர் மாறி வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல்க்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த சேவைகள் முடக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.