நம்பியவர்கள் கழுத்தை அறுத்து விட்டார்கள்; பாஜ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புதிய அணியை உருவாக்கும் ஓபிஎஸ்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக செயல்பட்டு வந்தது. பாஜ தலையீட்டால் தொடர்ந்து இந்த 2 அணிகளும் இணைந்தன. தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் இருந்து இணைந்து வழிநடத்தி வந்தனர். ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும், கட்சியில் செல்வாக்கு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமாக இருந்தது.
2022ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட, அதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு தீர்மானம் மூலம் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக போட்ட வழக்குகளில் ஓபிஎஸ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அதே சமயம் அதிமுக பெயரில் செயல்பட தடை விதிக்கப்பட்டதால் ஓபிஎஸ் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறார்.
2024 மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். அதுவும் அதிக பணம் செலவு செய்து தான் இரண்டாம் இடத்துக்கு வந்தார். மக்களவை தேர்தலில் கடும் தோல்விக்கு பிறகு, அதிமுகவில் பிரிந்துள்ள அணிகளை இணைக்க வேண்டும் என்று பாஜ முடிவு செய்தது. இதற்காக பாஜ பல்வேறு வகைகளிலும் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, அணிகள் இணைப்பு சாத்தியம் இல்லை, ஓபிஎஸ்சை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவும் பாஜவும் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டேன் என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருகிறார். இந்த விஷயத்தில் பாஜ தலையிட வேண்டாம் என்றும் எடப்பாடி கூறி விட்டார். இதனால் அதிமுக இணைப்பில் ஓபிஎஸ்சுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என பாஜவும் கூறி வந்தது. எடப்பாடியின் கடும் அழுத்தத்தால் இதுவும் கை நழுவி விட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை ஓபிஎஸ் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
ஏற்கனவே பிரதமர் தமிழகம் வந்த போதும் ஓபிஎஸ்சுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது ஓபிஎஸ் ரொம்ப இறங்கி வந்து சந்திக்க கடிதம் எழுதியிருந்தார். இதற்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி வழங்கவில்லை. எடப்பாடி சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. அதே போல ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு மட்டும் வரவேற்பு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டு வருவதால் அவர் கூட்டணியில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ் கோபத்தில் 2 நாட்கள் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்று விட்டார்.
ஓபிஎஸ் சந்திப்புக்கு அனுமதி அளிக்காதது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பாஜ கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்கிற குரல் தற்போது எழுந்துள்ளன. பாஜவை நம்பி தான் இவ்வளவு நாட்கள் இருந்தோம். அவர்கள் சொல்லும் பேச்சுக்கு எல்லாம் தலையாட்டினோம். ஆனால், அவர்களும் கைவிட்டு விட்டார்கள். இவ்வளவு நாள் பாஜவை நம்பியதற்கு கழுத்தை அறுத்து விட்டார்கள். இனியும் அவர்களை நம்பி இருந்தால் அரசியல் வாழ்க்கை அழிந்து போய் விடும் என்று ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தங்கள் குமுறலை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் எடப்பாடி அணிக்கு எதிராகவும், பாஜவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும் புதிய அணியை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தனிக் கட்சி தொடங்கினால் அதிமுகவுக்கு இனி உரிமை கோர முடியாத சூழல் உருவாகிவிடும். அத்துடன், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் அவர் தொடர்ந்த வழக்குகளும் செல்லாததாகிவிடும். இதனால் இரண்டு பேருக்கும் எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


