Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

22 லட்சம் பேர் இறந்து விட்டார்களா? பீகாரில் வாக்காளர்களை நீக்கியது பெரிய மோசடி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சிங்கம்புணரி: பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் என்பது பெரிய மோசடி என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், நேற்று அளித்த பேட்டி: பீகார் தேர்தல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் கொண்டு வரும் முறை தவறு. அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

பீகாரில் ஏழை, எளிய படிக்காத, சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள்தான் இதனால் பாதிக்கப்படுவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இடையில் 22 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டார்களா? 22 லட்சம் பேர் இருந்தால் என்ன? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தது தானே? அப்போது நரேந்திர மோடி ஜெயிக்கவில்லையா? 66 லட்சம் வாக்காளர்களை நீக்கப் போகிறார்கள்.

அதற்கு முகவரி கிடைக்கவில்லை; உயிரிழந்தவர்கள் என சாக்கு சொல்கிறார்கள். இதை ஏன் தேர்தலுக்கு முன்பாக செய்ய வேண்டும். இது பெரிய தவறு, மோசடி. மகாராஷ்டிராவில் போலி வாக்காளர்களை சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதை இனிமேல் பண்ண முடியாது. மகாராஷ்டிராவில் குட்டு வெளிப்பட்டு விட்டது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பீகார் தொழிலாளிகள் கட்டிட பணிகளை மேற்கொள்கிறார்கள்.

அவர்கள் தேர்தலுக்கு பீகாருக்கு ஓட்டு போட செல்ல மாட்டார்களா? நிரந்தர குடியேற்றம் என்றால் என்ன? இந்தியாவுக்குள் தானே குடியேறி உள்ளனர். அமெரிக்காவிலா குடியேற்றம் செய்து விட்டார்கள். போலி வாக்குப்பதிவை தடுப்பதற்கு வேறு வழிகள் இருக்கிறது. அதனை விட்டுவிட்டு புல்டோசரை வைத்து வாக்காளர் பட்டியலை மாற்ற பார்க்கிறார்கள். அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இதை கண்டித்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.