ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 108 (பகவத்கீதை உரை)
‘யோகம் யாருக்கு சித்திக்கும்?’ என்பதை கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அடுத்த ஸ்லோகம்
மூலமாக விளக்குகிறார்:
``நாத்ய ச்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனச்னத
ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன’’ (6:16)
‘‘அர்ஜுனா, அளவுக்கு மீறி புசித்தலும், அறவே உண்ணாதிருப்பதும் யோகம் சித்திக்கச் செய்யாது; அதேபோல நீடித்த உறக்கத்தில் கனவு சுகம் காண்பவனுக்கும், உறங்கவே இல்லாமல் விழித்திருப்பவனுக்கும் யோகம் கிட்டாது.’’ அதாவது, உடலின் தன்மையைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார் கிருஷ்ணன். ஜீவித்திருக்க ஒருவனுக்கு உணவு எவ்வாறு அவசியமோ, அதேபோல ஓய்வும் அவசியம். ஆனால், உணவில் அதிமோகம் கொள்பவனும், நீடித்த உறக்கத்தில் சுகம் அனுபவிப்பவனும், தன் உடலைத் தானே அவமதிப்பவன் ஆவான். அவயவங்கள் இயல்பாக இயங்குவதாலேயே, தான் ஆரோக்கியமானவன் என்று கற்பனை செய்துகொள்கிறான்.
முதலில் உணவுக் கட்டுப்பாடு
‘வயிற்றைக் கேட்டுக் கொண்டுதான் வாய் சாப்பிட வேண்டும்’ என்று ஜப்பானிய பழமொழி ஒன்று உண்டு. அதில் அர்த்தம் இருக்கிறது. உடற்கூறு பற்றிய விழிப்புணர்வு, ஜப்பானில் குழந்தைப் பருவத்திலிருந்தே போதிக்கப்பட்டு விடுகிறது. ஆமாம். உடலுக்குள்ளே உள்ள உறுப்புகளின் இயக்க ரகசியத்தை யாராலுமே அறிய முடியவில்லை. ஒவ்வொன்றும் அதனதன் வேலையை செவ்வனேதான் செய்து வருகிறது.
அந்த உறுப்புகளில் மிகவும் பிரதானமானது - வயிறு, இரைப்பை. ருசிக்கு அடிமையாகி நாக்கு ஏற்கும் எல்லா உணவுப் பொருட்களும், பற்களால் அரைக்கப்பட்டு உள்ளே போய் இரைப்பையில் விழுகின்றன. அதேபோல, பானங்களும் விழுங்கப்படுகின்றன. சரி, இவ்வாறு உள்ளே வந்து விழும் பொருட்களின் தன்மையை ஆராய்ந்து, அவற்றுடன் இணைந்து வரும் சத்துகளைப் பிரித்து ரத்தத்தில் சேர்க்கவும், வேண்டாத சக்கையைக் குடலுக்கு அனுப்பவும், இந்த இரைப்பைதான் வயிற்றுப் பகுதியின் தலைமைச் செயலகமாகப் பணியாற்றுகிறது.
இரைப்பை சோதித்து அனுப்பும் உணவுப் பகுதிகளை கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்றவை, அதே இரைப்பையின் ஆணைப்படி தத்தமது தேவைக்கேற்ப சத்தாகவும், கழிவாகவும் பிரித்துக் கொள்கின்றன. இதனால் ரத்தம் உடலெங்கும் பரவி, இதயத்தினுள் சென்று சுத்திகரிக்கப்பட்டு நல்ல ரத்தமாக வெளிவந்து உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாய் மட்டுமல்லாமல், நாசி உள்ளே அனுப்பும் காற்றை நுரையீரல் கிரகித்துக் கொண்டது போக, இரைப்பைக்குள்ளும் போகுமானால், அதையும் பெரும்பாலும் ஏப்பமாகவோ, அபானவாயுவாகவோ இரைப்பை வெளியே தள்ளி விடுகிறது. இந்த இயக்கம், இயற்கையாகவே அமைந்திருக்கிறதே, அதுதான் அதிசயம்!
இவ்வளவு ஏன், நாம் விழுங்கும் எந்தவகை மருந்தும், மாத்திரையும் இரைப்பைக்குதான் போய்ச் சேருகிறது. இன்ன மருந்து அல்லது மாத்திரை இன்ன உபாதைக்கானது என்பதைத் தெரிந்து கொண்டு, அவ்வாறு நோயுற்றிருக்கும் எந்த உறுப்புக்குப் போய்ச் சேரவேண்டுமோ அங்கு கொண்டு சேர்க்க, எந்தக் கணக்கு அடிப்படையில் இரைப்பை இயங்குகிறது?
இதெல்லாம் சராசரியான ஆரோக்கியமான உடலுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் இயக்கங்கள்தான். அதேசமயம் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளைப் பொறுத்துதான் இரைப்பையும் தன் கடமையைச் செய்யும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக கண்டதையும் போட்டு, அதற்குள் திணித்தால், ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் அது ஒத்துழையாமை இயக்கம் நடத்தும்; அதுவே பலவகைப் பிணிகளுக்கும் வழிவகுக்கும்.
‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?’ என்ற ஆவல் மிகும்போதே நிறுத்திவிடுவது உத்தமம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அசைவ உணவு உண்பவர்களைப் பார்த்து சுவாமி சின்மயானந்தா, ‘உங்கள் இரைப்பையை ஏன் சவக்குழியாக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று வருத்தத்துடன் கேட்கிறார்.
‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்’ என்று கவிஞர் கண்ணதாசன் பாடியது நம் இரைப்பைக்கும் பொருந்தும்! இத்தனை ரகசிய, ஆனால் ஆரோக்கியமான இயக்கங்களுக்குக் காரணமான இரைப்பையை, இறைப்பை என்று சொல்லலாம் அல்லவா? இப்படிப்பட்ட இரை(றை)ப்பையை அவமரியாதையாக நடத்தலாமா? மிக எளிமையான நடைமுறை ஒன்றைப் பார்க்கலாம். ஏதோ காரணத்துக்காக காலை உணவை எடுத்துக் கொள்ள முடியவில்லை; மதியமும் அதேபோல ஆகிவிடுகிறது. இரவில்தான் நேரம் கிடைக்கிறது. அப்போது சுவை குன்றாத வகையில் சூடாக்கப்பட்ட காலை, மதிய உணவுகள் மற்றும் இரவு உணவும் நம் முன்னே அணிவகுக்கின்றன. நம்மால் இந்த மூன்று வேளை உணவுகளையும் ஒருசேர இப்போது சாப்பிட முடியுமா, வயிறு ஏற்குமா?
இப்படி நாள் பூராவும் உண்ணாமல் இருப்பதும் கூடாது; மூன்று வேளை உணவையும் ஒரே சமயத்தில் உண்ண முயற்சிப் பதும் கூடாது என்பது கிருஷ்ணனின் அறிவுரை. பொதுவாகவே பலருக்கும், தாம் இயல்பாக வாழ தம் உடல் மூலகாரணமாக விளங்குகிறது என்ற எண்ணமே இல்லாதிருக்கிறது. வயிற்றில் ஏதேனும் வலியா, அப்போதுதான் வயிற்றைப் பற்றிய கவனம் வருகிறது. உடனே மருந்து, மாத்திரை என்று கேட்டு மருத்துவரை நோக்கி ஓடுகிறார்கள்.
உபாதை சரியாகிவிட்டதா, அவ்வளவுதான் வயிற்றைப் பற்றி நினைப்பதேயில்லை. ஆனால், ஒவ்வொரு கவளத்தையும் வாய்க்குள் போடும்போதே வயிற்றைப் பற்றிய நினைவு வரவேண்டும் என்கிறார் கிருஷ்ணன். அப்படி வந்தால் நாம் எச்சரிக்கையுடன், உணவுப் பொருளைத் தேர்ந்தெடுத்து அளவுக்கு மீறாமல் உண்போம் என்பது அந்த அறிவுரையின் உள்ளீடு. வயிறு மட்டும் என்றில்லை, உடலின் ஒவ்வொரு உறுப்பையும் நாம் அப்படித்தான் அதனதன் இயக்கத்துக்கு மதிப்புக் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும். பொதுவாக, அரை வயிறு உணவு, கால் வயிறு குடிநீர், கால் வயிறு காற்றோட்டம் என்ற அளவில்தான் உணவை உட்கொள்ள வேண்டும் என்று நம் மூதாதையர் அறிவுறுத்துகிறார்கள்.
அடுத்தது தூக்கக் கட்டுப்பாடு
தூக்கத்தில் சுகம் கண்டவன் அதைத் தவிர வேறு எந்தப் பணியிலும் ஈடுபட விரும்ப மாட்டான். அதனால்தான் குடிகாரர்களை அத்தனை எளிதாகத் திருத்த முடிவதில்லை. குடி மயக்கத்தில் கிறங்கிக் கிடக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். பொதுவாகவே உண்ட மயக்கம், கலவி கிறக்கம் எல்லாம் வாழ்க்கையின் இயல்புதான் என்றாலும், குடிமயக்கம் என்பது ஒருவன் தானாக உருவாக்கிக் கொள்வதாகவே இருக்கிறது. நல்ல, ஆழ்ந்த உறக்கம் ஒருவருடைய உடலை வலுப்படுத்துகிறது. ரகசியமாக 24 x 7 என்று இயங்கும் உள் உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன. நன்கு ஓடியாடி விளையாடிய குழந்தையும், பகலில் சரீர உழைப்பை மேற்கொண்டவரும் இரவில் நிம்மதியாக உறங்குகிறார்கள்.
இது, மறுநாள் அதே மாதிரியான இயக்கங்களுக்கு அவர்களுடைய உடலை உற்சாகமாகத் தயார் பண்ணிவிடுகிறது! இந்த அளவீட்டில் பார்த்தால், உடல் உழைப்பு இல்லாத முதியவர்கள், உறங்குவதில்ல; மாறாக வயோதிக ஓய்வெடுக்கிறார்கள், அவ்வளவுதான். பொதுவாகவே வார நாட்களைவிட, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கம்போல காலையில் துயில் எழ பலர் விரும்புவதில்லை. அது தூக்கமாக இல்லாவிட்டாலும், சும்மாவேனும் படுத்திருப்பதில் ஒரு சுகம்! இதுதான் அடுத்த நாள் வேலைக்கோ, கல்விக்கூடத்திற்கோ போக அலுத்துக் கொள்ளும் சோம்பலாக மாறுகிறது.
அதாவது உறக்கத்துக்கும் ஓர் அளவு இருக்கிறது. பல்வேறு கவலைகளால் முதியவர்கள் இரவிலும் தூங்காமல் இருப்பதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கும் சுகம் அனுபவிக்கும் இளைஞர்கள் பகலிலும் தூங்கிக் கொண்டிருப்பதும் இப்படி அளவு வைத்துக் கொள்ளாததால்தான். எதிலும் ஓர் அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.
அவரவர் சரீர நிலைமையை உத்தேசித்து ஒவ்வொருவரும் அவரவராகவே அந்த அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது அவசியம். சிலருக்கு நான்கு மணிநேரத் தூக்கமே போதும்; நாள்பூராவும் சுறுசுறுப்பாகத் தோன்றுவார்; அதேபோல புஷ்டியான ஆகாரத்தை ஒருவேளை எடுத்துக் கொண்டால், பலமணி நேரம் கடந்துதான், அடுத்த பசி அவருடைய வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்கும். இப்படி அளவைத் தீர்மானித்துக் கொண்டுவிட்ட பிறகு, அதை ஒவ்வொரு நாளும் தவறாமல் பின்பற்ற வேண்டியதும் கட்டாயம்.
தினமும் ‘108ஸ்ரீராமஜயம்’ எழுதுவது என்று ஒருவர் சங்கல்பம் எடுத்துக் கொள்வார். முதல் சில நாட்களுக்கு உற்சாகமாக அதைப் பின்பற்றுவார். நாளாக, ஆக அவர் மனம் வேறெங்கோ சஞ்சரிக்க ஆரம்பிக்கும். மெகானிகலாக விரல்கள் பேனா பிடித்து ‘ஸ்ரீராமஜயம்’ எழுதிக் கொண்டிருக்கும்தான். ஆனால் ஈடுபாடு எழுத்தில் இருக்காது. இதனாலேயே 108, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வரும்; ‘நாளைக்கு 108 நிச்சயம்’ என்ற போலி வைராக்கியமும் தோன்றும்.
ஆக, தன்னுடைய சரீர மற்றும் மனோதிடத்தை அனுமானித்துக் கொண்டு அளவையும் தீர்மானிக்க வேண்டும். சுருக்கமாக சொல்வதானால், அளவுக்கு அதிகமாக உண்பவனுக்கு யோகம் சித்திக்காது; அறவே உண்ணாதவனுக்கும் கிட்டாது. அதேபோல மிகைபட உறங்குபவனுக்கும், அல்லது விழித்திருப்பவனுக்கும்கூட அது எட்டாது.
‘சராசரி’ என்பது நம் நியமங்களை நிர்ணயிக்கும் அளவுகோல். இது காரியார்த்தமானது. அதாவது, நம்முடைய பணிகளை, உழைப்பைச் சார்ந்தது. சிலருக்கு ஐந்து மணிநேரமோ, ஏழு மணிநேரமோ தூக்கம் போதும். உறக்கத்தின் இந்தக் கால அளவை, பலனை வைத்து, நாமே நம் தூக்க நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் அதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க முடியாமலும் போகலாம். வழக்கமாக ஐந்து மணிநேரம் தூங்குபவர், முந்தைய நாளின் கூடுதலான உடல் உழைப்பு காரணமாக அன்றிரவு ஏழு மணிநேரம் தூங்கலாம்! அதனால்தான் இந்த சராசரி அளவீடு, காரியார்த்தமானதாகிறது.
நம் உடல் வீணையைப் போல. அது இனிய நாதம் தரவேண்டும் என்றால் அதன் தந்திகளை அளவோடு இறுக்க வேண்டும். அதிகமாக இறுக்கினால் தந்தி அறுந்துபோக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, தளர்வாக இறுக்கினாலும் அபஸ்வரம்தான்! அளவாக இறுக்க வேண்டும். அவ்வாறு செய்திருக்கும்போதே, வாசிப்பின்போது ஓரிரு சமயம், தந்திகளில் சுருதியை சரிசெய்து கொள்ள வேண்டியிருக்கிறது!
ஆக, எதிலும் அளவு தேவை. இதை, சாப்பிடுவது, உறங்குவது என்ற தினசரி கட்டாயமான செயல்களில் நம்மால் அமல்படுத்த இயலுமானால், நம் உணர்வில், பேச்சில், செயலில் நம்மால் பரிமளிக்க முடியும். இந்த அளவு - நிதானம் - இதுதான் ஒரு யோகியின் அடிப்படைத் தேவை. இந்த ஸ்கேல் இல்லாததுதான் பலருடைய நோய்க்கு காரணமாகிறது. இஸ்ரேலிய குழந்தை மருத்துவர் ஒருவர், ஒரு குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறான் என்றால், அதற்கு அவனுடைய தாயார் உணவை அவனுக்குள் திணிப்பதுதான் காரணம் என்கிறார்.
தன் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும், பலசாலியாக விளங்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுந்த தாய்ப்பாசம்தான் அது; ஆனால் அது குழந்தைக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை அந்தத் தாய் கவனிக்க வேண்டும். பாசத்துக்குப் பணிந்தோ, மிரட்டலுக்கு பயந்தோ அந்தக் குழந்தை உணவை எடுத்துக் கொண்டாலும், அவனுடைய விருப்பத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், ஏற்படும் பின்விளைவுதான் இது என்று விளக்குகிறார் அவர். குழந்தையின் ரசனையை, ருசியை அனுமானிக்க வேண்டும். அதைப் பொறுத்து தாய் உணவளிக்க வேண்டும் என்பது அவருடைய அறிவுரை. ஆக, எங்கும், எதிலும், எப்போதும் குறிப்பிட்ட அளவீட்டை மீறாதவனுக்கு தியானம் சித்திக்கும்; யோகமும் சித்திக்கும் என்கிறார் கிருஷ்ணன்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்

