Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2023ம் ஆண்டே லைட்டர்களுக்கு தடை; தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எடப்பாடி பேசி வருகிறார்: அமைச்சர் தாக்கு

சென்னை: தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பசரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக அரசு பொறுப்பேற்றப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு 8.9.2022 அன்று, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசின் தொடர் அழுத்தத்தின் காரணமாக ஒன்றிய அரசு 29.6.2023 அன்று ரூ.20க்கும் குறைவான பாக்கெட் லைட்டர்கள் எரிவாயு எரிபொருள் மற்றும் நிரப்ப முடியாதவை ஆகியவற்றிற்கு இறக்குமதி செய்ய தடை விதித்தது. இருப்பினும், மற்ற நாடுகளில் இருந்து லைட்டர்கள், உதிரிபாகங்களாக, இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு, லைட்டர்களாக பொருத்தப்பட்டு மீண்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதுகுறித்து மீண்டும் ஒன்றிய அமைச்சர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் 13.10.2024 அன்று பாக்கெட் லைட்டர்களின் பாகங்கள், எரிவாயு எரிபொருள், நிரப்ப முடியாத அல்லது நிரப்பக்கூடிய லைட்டர்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதித்து அறிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் போர், அமெரிக்கா பொருளாதார கட்டுப்பாடு காரணமாக பொட்டாசியம் குளோரைடு இறக்குமதி தடை செய்யப்பட்டது, தீப்பெட்டி தொழில் பாதிப்பு அடைந்தபோது தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சென்னை பெட்ரோ கெமிக்கல் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

உலகம் அறிந்த கோவில்பட்டி கடலை மிட்டாய், உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி கோவில்பட்டி பகுதியில் கடலை மிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ரூ.6.42 கோடி அரசு மானியத்துடன், ரு.7.13 கோடி மதிப்பீட்டில் கடலை மிட்டாய் உற்பத்திக்கான பொது வசதி மையம் அமைக்க, சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாத்திற்குள் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

எம்எஸ்எம்இ துறைக்கு கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ரூ.3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றபின் முதல்வர், இந்த 5 ஆண்டுகளில் மட்டும், ரூ.6 ஆயிரத்து 626 கோடி நிதி ஒதுக்கி 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 மடங்கு நிதி வழங்கி எம்எஸ்எம்இ துறையை தூக்கி நிறுத்திய பெருமை நம் முதல்வருக்கு உண்டு. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு காலத்தில் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.2 ஆயிரத்து 57 கோடியே 90 லட்சம் மானியம் வழங்கப்பட்டு. ரூ.5 ஆயிரத்து 301 கோடியே 63 லட்சம் வங்கி கடனுதவி வழங்கி 63 ஆயிரத்து 14 புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.